சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்துவந்த சத்யபிரத சாஹூ கால்நடைத் துறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வந்த சத்யபிரத சாஹூ தற்போது தமிழக அரசின் கால்நடைத் துறைச் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அந்த பொறுப்புக்கு அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சனா பட்நாயக் 2002ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். இவர் தற்போது தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளர் ஆக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராகவும் இருந்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவ தமிழக அரசால் அனுப்பப்பட்ட குழுவில் அர்ச்சனா பட்நாயக் இடம்பெற்றிருந்தார். தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும், வரும் 2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்தும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்துள்ளது.