வாஷிங்டன்: ‘‘மக்கள்அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், நாட்டின் சுதந்திரத்துக்கான, ஜனநாயகத்துக்கான, மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான எனது போராட்டம் ஒருபோதும் ஓயாது’’ என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் பெண் அதிபராக அவர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தோல்வியடைந்துள்ளார். இந்த நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் நேற்று தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் கமலா ஹாரிஸ் உணர்ச்சிகரமாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:
இந்த தேர்தல் முடிவு நாம் விரும்பியது அல்ல. நாம் போராடியது இதற்கு அல்ல. ஆனால், அமெரிக்க ஜனநாயக விதிகளின்படி, இந்த முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள்அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். வெற்றி பெற்ற ட்ரம்ப்புக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தேன்.
தேர்தலில் தோல்வி அடைந்தாலும், எனது போராட்டம் தோல்வி அடையாது. நாட்டின் சுதந்திரத்துக்கான, ஜனநாயகத்துக்கான, மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான எனது போராட்டம் ஒருபோதும் ஓயாது. தங்கள் உடல் குறித்து முடிவெடுக்கும் சுதந்திரம் அமெரிக்க பெண்களுக்கு உள்ளது. துப்பாக்கி வன்முறையில் இருந்து நமது பள்ளிகளையும், வீதிகளையும் பாதுகாக்க வேண்டும். நமது உரிமையை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தை நாம் ஒருபோதும் கைவிடக்கூடாது. தேர்தல் முடிவு குறித்து யாரும் மனம் தளர வேண்டாம். இதில் இருந்து நாம் மீண்டெழுவோம்.
அமெரிக்கா இருண்ட காலகட்டத்துக்குள் நுழைவதாக சிலர் கூறுகின்றனர். வானத்தின் இருளை நட்சத்திரங்கள் நிரப்புவதுபோல, நமது வாழ்க்கையை உண்மை, நம்பிக்கை, சேவை என்ற ஒளிகளால் நிரப்புவோம். சில நேரங்களில் நமது போராட்டம் வெற்றி பெற கூடுதல் காலம் எடுக்கும். அதை தோல்வி என்று கருதக்கூடாது. நாம் தொடர்ந்து போராடுவதே முக்கியம். போராடுவோம், வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.