மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்துகள் கூறப்பட்டதற்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுபோன்ற கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து விபரம் அறிந்தவர்கள் வெளியிட்ட தகவல்: ‘தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பிர் சிங் ஆகியோருடன் காணொலி வாயிலாக அதிகாரிகள் மறு ஆய்வுக்கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கலந்து கொண்டார். அப்போது அவர், பிரச்சாரத்தில் பெண் அரசியல்வாதிகளை குறிவைத்து இழிவான மற்றும் அருவருக்கத்தக்க வகையிலான கருத்துகள் கூறப்பட்டதற்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற விஷயங்களில் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த மறு ஆய்வுக் கூட்டத்தில் காவல் துறை ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பெண்களின் கண்ணியம் மற்றும் கவுரவத்துக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகள், செயல்கள் மற்றும் பேச்சுக்களைத் தவிர்க்குமாறு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியது. மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் பொது வாழ்க்கைக்கு தொடர்பில்லாத தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை. இதுபோன்ற கீழ்தரமான செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பொதுவெளிகளில் இனி தங்களது செயல்கள் மற்றும் சொல்லாடல்களில் பெண்கள் குறித்து கண்ணியத்தை வளர்த்துக்கொள்வார்கள் என்று நம்புகிறேன் எனத் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் தெரிவித்தார்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) கட்சியின் மும்பாதேவி வேட்பாளர் ஷைனா என்.சி.க்கு எதிராக சிவசேனா (உத்தவ் தாக்ரே அணி) கட்சியைச் சேர்ந்த அரவிந்த் சேவந்த் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை தெரிவித்ததாக சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.