கோவை: கோவையைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.செல்வராஜ் மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 66.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கே.செல்வராஜ். முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆவார். தற்போது திமுகவில் செய்தி தொடர்பு துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவரது மனைவி கலாமணி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகன் வெங்கட்ராம் திருமணம் திருப்பதியில் இன்று நடைபெற்றது. இதனிடையே திருமண நிகழ்வுகளை முடித்துவிட்டு, இரு வீட்டார் கார் மூலம் இன்று கோவைக்கு புறப்பட்டனர்.
மலையில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்தபோது செல்வராஜுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஆனால், மருத்துவமனை செல்லும் வழியில் அவர் காலமானார். அவரது உடல் கோவைக்கு எடுத்து வரப்படுகிறது. இதனிடையே அவரது உடல் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தொடர்ந்து அவரது இறுதி சடங்கு இன்று (நவம்பர் 9) நடைபெற உள்ளது.
செல்வராஜ் அரசியல் பயணம்: கடந்த 1991 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கோவை மேற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் செல்வராஜ்.. அப்போது காங்கிரஸ் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதலை தொடர்ந்து ஜெயலலிதா ஆதரவாளராக மாறி, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-வாகச் செயல்பட்டார். தொடர்ந்து 2006-ம் ஆண்டு காங்கிரஸ் சேவாதள அமைப்பின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
திமுக – காங்கிரஸ் கூட்டணி இருந்தபோது, கூட்டணி கட்சியை விமர்சித்த காரணத்தால் 2015-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அதிமுகவில் சேர்ந்தார். ஆனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காத நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக மாறினார். பின்னர் அதிமுகவை விமர்சித்துவிட்டு அக்கட்சியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து 2022-ல் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
மு.க.ஸ்டாலின் இரங்கல்: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு: “முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ் திடீரென்று மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, கட்சியின் கொள்கைகளை, கருத்துகளை விவாதங்களிலும், மேடைப் பேச்சுகளிலும் ஆணித்தரமாக எடுத்து வைத்தவர்.
சமீபத்தில் நான் கோவை சென்றிருந்த போது, அங்கு அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்ற அவர், நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் என்னைச் சந்தித்து, ‘நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்திருந்தது’ என்று நெஞ்சாரப் பாராட்டிவிட்டு, ‘மகனின் திருமணத்தை வைத்திருக்கிறேன். திருமணம் முடிந்து மணமக்களுடன் வந்து தங்களிடம் சென்னையில் வாழ்த்து பெறுகிறேன்’ என்றார். ஆனால் இன்று மகனின் திருமணம் நடந்தேறி வந்து கொண்டிருந்தபோதே, அவருக்குத் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் என்ற செய்தி, என்னை ஆழ்ந்த வேதனையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. கோவை செல்வராஜை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.