சென்னை: சென்னையில் ரஷ்ய ஓவியர் வரைந்த கண்ணை கவரும் ஓவியங்கள் அடங்கிய கண்காட்சி வரும் டிச.15 வரை நடைபெறுகிறது.
சென்னை ரஷ்ய இல்லம் சார்பில் பிரபல ரஷ்ய ஓவியர் லெவ்செங்கோ ஓல்காவின் ஓவிய கண்காட்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் தொடங்கியது. ரஷ்ய உதவி துணை தூதர் அலெக்சாண்டர் டோடோனோவ் தொடங்கி வைத்தார். டிச.15 வரை நடைபெறும் கண்காட்சியில் ஓவியர் ஓல்கா வரைந்த 50-க்கும் மேற்பட்ட ஆயில் பெயிண்டிங்ஸ் (ஓவியங்கள்) இடம்பெற்றிருந்தன.
இந்தியாவின் ஜெய்ப்பூர், பஞ்சாப், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம், கோவா, வாரணாசி, அம்ரிஸ்டர், அஜ்மீர், ராம்நகர் போன்ற பல்வேறு இடங்களிலும், நேபால் நாட்டிலும் ஓவியர் ஓல்கா தங்கியிருந்து அந்தந்த பகுதிகளின் அழகை ரசித்து வரைந்திருந்த பாரம்பரியமிக்க ஓவியங்கள் கண்காட்சியில் உயிரோட்டத்துடன் காட்சியளித்தன. கண்காட்சியை பார்வையிட வந்த மக்கள் ஓவியங்களை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததுடன், ஓவியருடன் நேரடியாக கலந்துரையாடி ஒவ்வொரு ஓவியத்தின் அர்த்தங்களையும் கேட்டறிந்தனர்.
கண்காட்சி குறித்து ஓவியர் ஓல்கா கூறுகையில், “இந்த கண்காட்சியை அன்புக்காக சமர்பிக்கிறேன். இந்தியாவில் பல ஆண்டுகள் பயணித்திருக்கிறேன். அப்போது நான் சுற்றிப் பார்த்த அனைத்தையும் நேசித்தேன். ஏழை, பணக்காரன் என்று யாரும் என்னை பிரிக்கவில்லை. குடிசைகளில் வாழ்ந்தேன். கடற்கரைகளில் உறங்கினேன். அரண்மனைகளில் வாழ்ந்தேன். எங்கு பார்த்தாலும் சுவாரஸ்யமாக இருப்பவர்களை கண்டேன்.
வாழ்க்கையில் மிக முக்கியமானது அன்பை பெற வேண்டும். அன்பை மற்றவர்களுக்கும் பகிர வேண்டும்” என்று கூறினார். இந்நிகழ்வில் துணை தூதரின் நேர்முக உதவியாளர் ஆண்ட்ரே எம்.எரோகின், இந்திய கலாச்சார தொடர்புகள் கவுன்சிலின் முன்னாள் மண்டல இயக்குநர் கே.முகமது இப்ராஹிம் கலீல், இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபையின் பொதுச்செயலாளர் பி.தங்கப்பன், கவிஞர் குட்டி ரேவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.