டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு காரணமாக, விவசாய கழிவுகளை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை 2 மடங்காக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், விவசாய நிலங்களில் அறுவடைக்குப் பின்பு மிஞ்சும் கழிவுகளை எரிப்பதால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசு அதிகரிக்கிறது. தீபாவளியை முன்னிட்டு டெல்லியில் கடந்த மாதம் 30-ம் தேதி முதல் காற்று மாசு மேலும் அதிகரித்தது. காற்றின் தர குறியீடு எண் 300-க்கும் மேல் அதிகரித்தது. இது மிக மோசமான நிலை.
காற்றில் இருக்கும் 2.5 மைக்ரோமீட்டர் மற்றும் அதற்கு குறைவான நுண்துகள்களின் அளவு கடந்த 1-ம் தேதி, 35.1 சதவீதமாக இருந்தது. கடந்த திங்கள் கிழமை 23.3 சதவீதமாக இருந்தது. கடந்த செவ்வாய் கிழமை 20.3 சதவீதமாக இருந்தது. இதனால் டெல்லியில் பல இடங்களில் பனிமூட்டம் மிக அடர்த்தியாக இருந்தது. விவசாய நிலங்களில் கழிவுகள் தொடர்ந்து எரிக்கப்பட்டதால், டெல்லியில் காற்றின் தரம் நேற்றும் மிக மோசமாக இருந்தது.
இந்நிலையில் விவசாய கழிவுகளை எரித்தால் விதிக்கப்படும் அபராதத்தை 2 மடங்காக உயர்த்தி மத்திய அரசு நேற்று புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இது வரை 2 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் கழிவுகளை எரித்தால் ரூ.2,500, 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் ரூ.5,000, 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகள் ரூ.15,000 அபராதம் செலுத்தி வந்தனர். இனிமேல் அவர்கள் முறையே ரூ.5,000, ரூ.10,000, ரூ.30,000 அபராதம் செலுத்த வேண்டும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் டெல்லியில் காற்று மாசு குறையும் வாய்ப்பு ஏற்படும்.