வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப் வரும் ஜனவரியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்நிலையில், வெள்ளை மாளிகையின் முதல் பெண் தலைமை அதிகாரியாக சூசி வைல்ஸை அவர் நியமித்துள்ளார். இது உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ட்ரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகம் அமைக்கும் பணியை சூசி வைல்ஸ் நிர்வகித்தார். இது அனைத்தையும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல் அவர் செய்திருந்தார். புளோரிடாவில் ட்ரம்ப் வெற்றி உரையாற்றிய போது சூசி வைல்ஸை பேச அழைத்தார். அப்போது கூட அவர் தயக்கம் காட்டினார்.
“சூசி புத்திசாலி. புதுமை விரும்பி, உலகளவில் மதிக்கப்படுகிறார். அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றும் பணியில் அவர் அயராது பாடுபடுவார், அதற்கான உழைப்பை கொடுப்பார் என நம்புகிறேன். அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக வெள்ளை மாளிகையின் பெண் தலைமை அதிகாரியாக இருக்க சூசி தகுதியானவர்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தொடர்ந்து தனது ஆட்சி நிர்வாகத்தில் பணியாற்ற உள்ளவர்கள் குறித்த அறிவிப்பை அதிபராக உள்ள ட்ரம்ப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிபரின் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவது தான் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியின் பணி. அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பல்வேறு விவகாரங்களுக்கு இந்தப் பணியில் இருப்பவர் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிபரின் அனைத்து செயல்பாடுகளையும் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். வெள்ளை மாளிகையில் இந்த அதிகாரியின் அனுமதியின்றி எதுவும் நடக்காது என சொல்லப்படுகிறது.
யார் இந்த சூசி வைல்ஸ்? 67 வயதான சூசி வைல்ஸ், நியூ ஜெர்சியில் பிறந்தவர். தற்போது புளோரிடாவில் வசித்து வருகிறார். அமெரிக்க அரசியல் ஆலோசகராக கடந்த 1979-ல் தனது பணியை தொடங்கினார். 1980-ல் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் ரொனால்ட் ரீகன் உடன் இணைந்து பணியாற்றி உள்ளார். தொடர்ந்து அரசியல் ஆலோசகராக பல்வேறு பணிகளை அவர் கவனித்து வந்தார்.
கடந்த 2016 அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்ட போது புளோரிடாவில் பிரச்சாரம் மற்றும் பரப்புரை சார்ந்த வியூகங்களை அமைத்தார். தொடர்ந்து 2020 தேர்தலிலும் அந்த பணியை செய்திருந்தார். இந்த சூழலில் தற்போது ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் வெள்ளை மாளிகையின் 32-வது தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.