India vs South Africa T20: இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் தற்போது இரண்டு நிகழ்வுகளுக்கு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy), மற்றொன்று ஐபிஎல் 2025 மெகா ஏலம்… (IPL 2025 Mega Auction) இந்த இரண்டும் இந்த நவம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில்தான் நடைபெற இருக்கின்றன. அதுவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு வேண்டும் அல்லவா… அதற்காகவே இந்தியா – தென்னாப்பிரிக்கா டி20 தொடர் தற்போது நடைபெறுகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் வீரர்கள் நிறைந்த இந்திய அணி (IND vs SA), மொத்தம் நான்கு டி20 போட்டிகள் கொண்ட தொடர எதிர்கொள்ள இருக்கிறது. டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின்னர் இரு அணிகளும் முதல்முறையாக இப்போதுதான் மோதுகின்றன. அந்த வகையில், முதல் டி20 போட்டி டர்பனின் கீங்ஸ்மேட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
202 ரன்களை குவித்த இந்திய அணி
இரு அணிகளும் தலா மூன்று சுழற்பந்துவீச்சாளர்களை பிளேயிங் லெவனில் வைத்து இந்த போட்டியை சந்தித்தன. குறிப்பாக, இந்திய அணி தரப்பில் ரமன்தீப் சிங், யாஷ் தயாள், வைஷாக் விஜயகுமார் உள்ளிட்டோர் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவர்களில் ஒருவர் இன்று அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய அணியும் டாஸ் வென்றால் பேட்டிங்கைதான் தேர்வு செய்திருக்கும் என சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) கூறியிருந்தார், காரணம் ஆடுகளம் பேட்டிங்கிற்கு அதிக சாதகமாக இருக்கும் என அவர் கணித்துள்ளார்.
முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி (Team India) 20 ஓவர்களும் பேட் செய்து 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்தது. ஒரு கட்டத்தில் 15.3 ஓவர்களில் 175 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை மட்டும்தான் இழந்திருந்தது. சதம் அடித்து செட்டிலான சஞ்சு சாம்சன் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தது முதல் கடைசி 27 பந்துகளில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெறும் 27 ரன்களைதான் அடித்தது. கடைசி கட்ட ஓவர்களில் மிடில் ஆர்டர் மற்றும் பின்வரிசை பேட்டர்கள் ஹர்திக் பாண்டியா 2, ரின்கு சிங் 11, அக்சர் பட்டேல் 7 என சஞ்சு சாம்சன் – சூர்யகுமார் கொடுத்த தொடக்கத்திற்கு சரியான ஃபினிஷிங்கை அளிக்கவில்லை.
சஞ்சு சாம்சனின் பெருமித சதம்
கடந்த மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான 3வது போட்டியில் சதம் விளாசிய சஞ்சு சாம்சன் (Sanju Samson), அதே பார்மை இன்று தொடர்ந்து சதம் விளாசினார். சர்வதேச டி20 வரலாற்றில் தொடர்ச்சியாக இரண்டு சதங்களை அடிக்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார். அவர் மொத்தம் 50 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் உள்பட 107 ரன்களை அடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 214 ஆக இருந்தது. ஓப்பனிங்கில் வந்த அபிஷேக் சர்மா 7(8) அவுட்டாகி இம்முறையும் சொதப்ப, சூர்யகுமார் 21(17) மற்றும் திலக் வர்மா 33(18) ரன்களை குவித்து ஆறுதல் அளித்தனர். தற்போது தென்னாப்பிரிக்கா (Team South Africa) 203 ரன்களை நோக்கி பேட்டிங் செய்து வருகிறது.
Innings Break! #TeamIndia post 202/8 on the board!
for @IamSanjuSamson
for @TilakV9
for captain @surya_14kumar
Over to our bowlers now!
Scorecard https://t.co/0OuHPYaPkm#SAvIND pic.twitter.com/UY6Wcm7Cmn
— BCCI (@BCCI) November 8, 2024
பாவம் ரிஷப் பண்ட்
சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து சதம் அடித்து மிரட்டியதால் டி20 அணியில் அவரது இடம் சீல் அடிக்கப்பட்டுவிட்டது எனலாம். எனவே, இந்திய டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்டர் கிடைத்துவிட்டார் எனலாம். ஓப்பனிங்கிலும், மிடில் ஆர்டரிலும் ரியான் பராக், திலக் வர்மா, சாய் சுதர்சன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில் உள்ளிட்ட தரமான வீரர்கள் வரிசைக்கட்டி நிற்பதால் மற்ற விக்கெட் கீப்பர்கள் இனி டி20 அணிக்கு திரும்புவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது.
ரிஷப் பண்ட் (Rishabh Pant) டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினாலும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இன்னும் பெரியளவில் சாதிக்கவில்லை. தற்போது சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம்ஸ ரிஷப் பண்டுக்கு மட்டுமில்லை துருவ் ஜூரேல், ஜித்தேஷ் சர்மா, இஷான் கிஷன், ஏன் கேஎல் ராகுல் என அனைவருக்குமே இனி டி20 அணியில் விளையாடும் வாய்ப்பை வெகுவாக குறைத்துவிட்டது எனலாம். அதிலும் கேஎல் ராகுல் (KL Rahul) டி20இல் இருந்து ஓய்வை அறிவித்துவிடலாம் என்று கூட சொல்லலாம்.