இயக்குநர் ராஜுமுருகனின் ஜோக்கர், மலையாள நடிகர் மம்முட்டியின் நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். திரைப்படங்கள் மட்டுமல்லாது, குக் வித் கோமாளி, பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றிருக்கிறார்.
இந்த நிலையில், ரம்யா பாண்டியனுக்கும், அவரின் காதலர் லோவல் தவானுக்கும் நவம்பர் 8-ம் தேதி நவம்பரில் ரிஷிகேஷியில் திருமணமும், நவம்பர் 15-ம் தேதி சென்னையில் திருமண வரவேற்பும் நடைபெறவிருப்பதாகக் கடந்த மாதம் தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, தீபாவளியன்று தன்னுடைய ஒளியுடன் தீபாவளிக் கொண்டாட்டம் என ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், ரிஷிகேஷியில் சிவபுரி கங்கைக் கரையில் ரம்யா பாண்டியன், லோவல் தவான் ஆகிய இருவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் ரம்யா பாண்டியனுக்குத் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.