இடஒதுக்கீட்டைப் பறிக்கும் கெட்ட நோக்கம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது- அமித் ஷா

ராஞ்சி,

ஜார்கண்ட்டில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் முதல் மந்திரியாக உள்ளார். தற்போது அங்கு சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நவம்பர் 13-ம் தேதி முதற்கட்டமாகவும், நவம்பர் 20ம் தேதி 2வது கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு மீண்டும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதேபோல் பாஜகவும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், பாலமு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது: தேர்தல் பிரசாரங்களின்போது ராகுல் காந்தி அரசியல் சாசன புத்தகத்தைக் காட்டுகிறார். ஆனால், அந்த புத்தகம் உண்மையில் அரசியல் சாசன புத்தகம் அல்ல.

ராகுல் காந்தி காட்டும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் பிரதி ஒன்றை ஒருவர் பெற்றுள்ளார். எந்த உள்ளடக்கமும் இல்லாத அந்த புத்தகத்தின் அட்டையில் இந்திய அரசியலமைப்பு என்று எழுதப்பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் போலி பிரதியை காட்டுவதன் மூலம் நீங்கள் அம்பேத்கரையும், அரசியல் நிர்ணய சபையையும் அவமதித்து விட்டீர்கள்.

ஓபிசி, பழங்குடியினர் மற்றும் தலித்துகளின் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் கெட்ட நோக்கம் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. ஓபிசி ஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் எதிரானது. மராட்டியத்தில் உலமாக்களின் பிரதிநிதிகள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தபோது, சிறுபான்மையினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதாக அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.