சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 2,500 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.
சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் கும்பாபிஷேகம் விழாவுக்கான பந்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயிலுக்கு 2008-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து, இக்கோயிலில் ரூ.4.82 கோடியில் 36 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் இதுவரை 2,265 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. வரும் 11, 14-ம் தேதிகளில் சுமார் 60 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2,500 கோயில்களில் கும்பாபிஷேகம் நிறைவுபெறும்.
கோயில் திருப்பணிகளுக்கு உபயதாரர்கள் இதுவரை ரூ. 1,103 கோடி நிதி வழங்கியுள்ளனர். 1,000 ஆண்டுகள் பழமையான கோயில்களைப் புனரமைத்து பாதுகாக்கும் வகையில், ரூ.426.62 கோடி மதிப்பில் 274 தொன்மையான கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 37 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. மேலும், மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழுக்களால் 10,460 கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.5,847 கோடி மதிப்பில் 20,806 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவற்றில் 9,183 பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கோயில்களுக்குச் சொந்தமான ரூ.6,847 கோடி மதிப்பிலான 7,115.56 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 1,75,995 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டுள்ளன.
சிலை திருட்டை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிலைகள் காணாமல் போனால், அவற்றை உடனடியாக கண்டறியும் வகையில் க்யூஆர் கோடு பொருத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம் சிலை தடுப்பு பிரிவு காவல் துறை தலைவர் அலுவலகத்திலிருந்து, அந்த சிலை எங்குள்ளது என்பதைக் கண்டறிந்து, மீட்கும் வகையில் புதிய தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்னும் 6 மாதத்தில் அந்தப் பணிகள் நிறைவுறும்.
அதேபோல, மீட்கப்பட்ட சிலைகள் எந்தக் கோயிலுக்குச் சொந்தமானவை என்பதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவை நிரூபணமாகும் நிலையில், அதே கோயிலில் அந்த சிலைகளை வைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.