தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா கோலோச்சிய அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம் நடிகை வினிதா.
“நடிகைங்களோட மூலதனமே அவங்களோட அழகான முகம்தான். சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச புதுசுல என்னோட முகம் பத்திரிகையில வந்தா, எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கும். அதே முகத்தை மூடி மறைச்சு நடமாட வேண்டிய சூழ்நிலை வரும்னு நான் கனவுலேயும் நினைச்சுப் பார்க்கலை” – கட்டுப்படுத்த முடியாத கண்ணீருடன் இவ்வாறு சொன்ன வினிதாவின் வார்த்தைகள்லதான் எத்தனை எத்தனை வலிகள், வேதனைகள். தன் அடையாளமா கொண்டாடப்பட்ட அந்த முகத்தையே மறைக்க வேண்டிய ரணமான சூழ்நிலை தனக்கு வரும்னு வினிதா கனவுலயும் நினைச்சிருக்க மாட்டார்.
ஆமாங்க. கடந்த காலம், சிலருக்கு கசந்த காலமாக மாறியிருக்கும். அப்படி, கசப்பான சில அனுபவங்களால், ‘எங்க போனார்?’, ‘இப்போ எப்படி இருக்கார்?’னு தெரியாமல் போன சினிமா பிரபலங்களில் வினிதாவும் ஒருவர். இவருக்குப் பெயர் சொல்லும்படியா பல படங்கள் இருந்தாலும், ‘கட்டபொம்மன்’ படத்துல சரத்குமார்கூட ‘பிரியா பிரியா’ங்கிற பாட்டுக்கு, பச்சரிசி பல் வரிசை தெரிய, முகமெல்லாம் மத்தாப்பூ புன்னகையுடன் நடனம் ஆடிய வினிதாவை அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா என்ன? குறிப்பாக, ‘ஜுஜிலிப்பா’னு சொன்னதுமே எல்லாருக்கும் வினிதாதான் சட்டென நினைவுக்கு வருவார். நடிகர் பிரபு நடிச்ச ‘வியட்நாம் காலனி’ படத்தில் சேட்டைக்காரியா நடிச்சு தமிழ் மக்களோட மனசுல நீங்கா இடம்பிடிச்ச வினிதாவின் பர்சனல் பக்கங்கள் பலரும் அறியாதது.
வினிதாவின் சொந்த ஊர் விசாகப்பட்டினம் பக்கத்துல இருக்கிற விஜயநகரம். இவங்க அப்பா குவைத்ல இன்ஜினீயரா வேலை பார்த்ததால், வினிதா பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கேதான். சினிமா பின்புலம் இல்லாத வினிதா, குவைத்தில் இருந்து எதற்காக இந்தியாவுக்கு வந்தார்?
இந்தக் கேள்விக்கான பதிலை நீங்க தெரிஞ்சுக்கிட்டா, பதறிப்போயிடுவீங்க. ‘அப்படி என்னதாம்பா நடந்துச்சு’னு கேட்கிறீங்களா? இதுக்கான பதிலை வினிதாவே ஒருமுறை பேட்டில சொல்லியிருக்காங்க.
“குவைத்துல நாங்க ஃபஹாஹீல் அப்படிங்கிற இடத்துல குடியிருந்தோம். ஈரான் – இராக் போர் ஆரம்பிச்சதால, 1990-ல நான், அம்மா, தம்பி மூணு பேரும் குவைத்துல இருந்து கிளம்பியாக வேண்டிய கட்டாயம். எங்களை மாதிரி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வேற வழியில்லாம நாட்டை விட்டு வெளியேறினாங்க. யுத்த சத்தத்துல நாங்க பயந்ததெல்லாம் இப்பவும் என் மனசுக்குள்ளேயே இருக்கு. குவைத்துல இருந்து துபாய்க்குப் போகணும்னா கப்பல் வரணும். அந்தக் கப்பலுக்காக உயிரைக் கையில பிடிச்சிக்கிட்டு நாங்க நாலைஞ்சு நாள்கள் காத்திட்டிருந்தோம். ஒருவழியா கப்பல் வந்துச்சு. அதுல எட்டு நாள்கள் பயணம். அதுக்கப்புறம் விமானம் மூலமா மும்பை வந்து இறங்கினப்போ விடியற்காலை 3 மணி. குவைத்துல இருந்து மும்பைக்கு வந்துசேர கிட்டத்தட்ட 25 நாள்களாச்சு. நம்ம நாட்டுல காலடி வெச்சப்பிறகுதான் எங்களுக்கெல்லாம் உயிரே வந்துச்சு!” – குவைத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்கள் கழித்து இந்தப் பேட்டியைக் கொடுக்கும்போதும் வினிதாவின் கண்களில் பயம் விலகவே இல்லைங்கிறது, அவர் சொன்ன வார்த்தைகளில் வெளிப்பட்ட வலிகள் மூலமா புரிஞ்சுக்க முடியும்.
இப்படிப்பட்ட சூழல்ல வளர்ந்த வினிதா, சினிமாவுக்கு எப்படி வந்தார்? மும்பையில் பி.காம் படிக்கும்போது லட்சுமியைத் தேடி ‘அல்லுடி பேரு அம்மாயி’ங்கிற தெலுங்குப் பட வாய்ப்பு வந்திருக்கிறது. அந்தப் படத்தின் ஹீரோ சுமன். ஆம், வினிதாவின் உண்மையான பேர் லட்சுமி.
வினிதாவோட வீட்ல, அவரோட அம்மா வழி, அப்பா வழின்னு எல்லா பெண்களோட பேருமே லட்சுமிதான் என்கின்றனர். வினிதாவே இதைப் பற்றி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார்.
முதல்முதலாக தெலுங்குப் பட வாய்ப்பு வந்தபோது, ’சினிமா வாய்ப்பு தேடி வந்திருக்கு. ஒரு படம் நடிச்சு பார்ப்போம். செட் ஆனா தொடர்ந்து நடிப்போம். இல்லைன்னா, படிப்பைத் தொடருவோம்’ என்கிற முடிவில்தான் திரைத்துறைக்கு வந்ததாக வினிதா சொல்லியிருக்கிறார்கள். வினிதாவின் படங்கள் வெளியான காலகட்டத்தில், ‘அழகு வினிதாவை இன்னும் நிறைய காட்சிகள்ல நடிக்க வச்சிருக்கலாம்’ என்கிற பேச்சுகள் எழுந்தன். அந்த அளவுக்கு வினிதாவின் முக வசீகரத்தை தமிழ் சினிமா கொண்டாடியது எனச் சொல்லலாம். வினிதாவின் அழகைப் பற்றிப் பேசுகிறபோது மற்றொரு முக்கிய தகவலையும் சொல்லியே ஆகவேண்டும்.
1991-92 வருடத்துக்கான மிஸ் இந்தியா போட்டியில் வினிதாவும் கலந்துகொண்டிருந்தார். முதல் சுற்றில் தேர்வான பத்து அழகிகளில் வினிதாவும் ஒருவராகத் தேர்வு ஆகியிருக்கார். அடுத்த சுற்றுக்கான போட்டி நடந்தபோது, வினிதாவுக்கு எக்ஸாம் இருந்ததால, அதை முடித்துவிட்டு வருவதற்குள் அடுத்த சுற்றுக்கான நேரம் முடிந்தது. அந்த வருடம் ‘மிஸ் இந்தியா’வாக மதுசாப்ரே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கார்.
“நான் மட்டும் எல்லா ரவுண்டுலயும் கலந்துக்கிட்டிருந்தா, மது சாப்ரேவுக்கு மத்த அழகிகள் மாதிரியே நானும் செம டஃப் கொடுத்திருப்பேன்”என ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார் வினிதா. அந்தத் தன்னம்பிக்கையான வார்த்தைகள்ல உண்மை இருக்குன்னுதான் சொல்லணும். ஏன்னா, வினிதாவோட முக வசீகரத்துக்கும் சிரிப்புக்கும் ‘மிஸ் போட்டோஜெனிக்’ அல்லது ‘மிஸ் பியூட்டிஃபுல் ஸ்மைல்’ அங்கீகாரம் கிடைச்சிருக்க நிறைய வாய்ப்பிருந்துச்சு அப்படிங்கிறதுதான் நிஜமோ நிஜம்.
வினிதாவுக்கு இந்தி, அரபி, உருது, தெலுங்கு, தமிழ், இங்கிலீஷ், ஃபிரெஞ்சு, மலையாளம் என ஏழு மொழிகள் தெரியும். இதுல தமிழும் மலையாளமும் இவர் நடிக்க வந்தப் பிறகு கற்றுக்கொண்ட மொழிகள். வினிதாவுக்கு பரதமும் தெரியும்; டிஸ்கோவும் அத்துப்படி. இந்தத் தகவல்களையெல்லாம் வினிதாவே இன்டர்வியூல ஒண்ணுல பகிர்ந்திருக்கார்.
‘அம்சமா அழகா ஒரு பொண்ண பார்த்தேன்’ என ரசிகர்கள் சிலாகிச்சுப் பாடுற அளவுக்கு, ஒரு கதாநாயகிக்கு தேவையான அழகு, திறமை, நடிப்பு, நளினம்னு எல்லாமே பக்காவா பொருந்தியிருந்த வினிதா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகள்ல நடிச்சிருக்கார். தமிழ்ல வினிதா நடித்த பல படங்கள் அவருக்குப் பேர் சொல்லும் படங்களாகவே அமைஞ்சிருந்துச்சு. தமிழ் சினிமாவில வினிதா கமிட்டான முதல் படம் ‘ஊழியன்’. இதுல, நடிகர் அருண் பாண்டியனுக்கு ஜோடியா நடிச்சாங்க. இந்தப் படம் வெளியாகும் முன்பே, 1993-ல் சரத்குமாருக்கு ஜோடியா இவங்க நடிச்ச ‘கட்டபொம்மன்’ படம் வெளியாகி, வினிதாவுக்கு நல்ல அறிமுகத்தைப் பெற்றுக்கொடுத்தது.
தாமரை மொட்டு மாதிரி பப்ளியான முகமும், வெட்டுப்பல் சிரிப்புமா ‘பாலைவனத்தில் ஒரு ரோஜா’ என ‘கட்டபொம்மன்’ படத்தில் சரத்குமாருடன் செம ஸ்டைலிஷ்ஷா இவர் ஆடிய டூயட் டான்ஸ், யூ-டியூப்ல இப்பவும் பலராலும் விரும்பிப் பார்க்கப்படுது. பிரபுடன் இவங்க நடிச்ச பல படங்கள் சூப்பட் ஹிட்டானது. குறிப்பாக, ‘வியட்நாம் காலனி’ படத்துல, பிரபுவுடன் இவங்க செய்கிற குசும்புகளும் சேட்டைகளும் செம ரகளையா இருக்கும். நடிகை ரோகிணியின் பின்னணிக்குரலில் ‘ஜுஜுலிப்பா’னு வினிதா செல்லமாகச் சொல்கிற அந்த வார்த்தை, அந்தக் காலகட்ட காதலர்கள் மத்தியில பயங்கர ஃபேமஸ். கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷனில் வெளியான ‘பெரிய குடும்பம்’ படத்துல பிரபுவைக் கல்யாணம் செய்வதற்கு, வினிதாவும் கனகாவும் போடுகிற ‘நீயா…? நானா…?’ சண்டையால் திரையரங்குகளில் சிரிப்பலை எகிறியது
90-ஸ் கிட்ஸை மிரள வைத்த ‘கருப்பு நிலா’ படத்தில் மாறுபட்ட நடிப்பால் வினிதா சிறப்பாக நடித்தால் நடிச்சிருப்பார்கள். இந்த வரிசையில, ‘மகா பிரபு’, ‘வேலுச்சாமி’, கார்த்திக்குடன் ‘சின்ன ஜமீன்’, ராம்கியோட ‘சின்ன மேடம்’, விஜயகாந்துடன் ‘பதவிப்பிரமாணம்’, ஜெயராமோட ‘புது நிலவு’ போன்ற பல படங்கள்ல நடிச்சாங்க.
‘வானத்தைப்போல’ படத்துல கிட்டத்தட்ட வில்லி கேரக்டர். அதிலும் சின்ன போர்ஷனில் வினிதா வருவார்கள். ஆனா, அதுலயும் ஸ்கோர் பண்ணியிருப்பாங்க வினிதா.
பெரும்பாலும் ஹோம்லி கேரக்டர்கள்லயே நடிச்சாலும், கிளாமர் ரோல்கள்லயும் ரசிகர்களைக் கிறங்கடித்தார் வினிதா. 1990-களில பிரபலமான நடிகையா இருந்தவர், சினிமாவுக்கு வந்த புதுசுல வருஷத்துக்கு ஏழெட்டுப் படங்களில் கூட நடித்தது கூடுதல் ஆச்சர்யம்.
குவைத்துல இருந்து உயிரைக் கையில பிடிச்சபடி கடல்ல பயணம் செஞ்சு வந்தப்போ, பின்னாள்களில் தமிழ்த் திரையுலகம் தன்னை ஷார்ட் பீரியடில் இந்தளவுக்கு தலை மேல் தூக்கிவைத்துக் கொண்டாடும் என வினிதாவே நினைத்திருக்கவில்லை. அந்த அளவுக்கு தமிழ்ப் பட தயாரிப்பாளர்கள் `இவரோடு கால்ஷீட்டுக்காகக் காத்திருந்தாங்க’ எனச் சொல்கிறது 90-களில் வெளியான வாரப்பத்திரிகை செய்திகள். ‘புது நிலவு’ படத்துல வர்ற ‘புது நிலவு… தனி நிலவு’ பாடல்ல வினிதாவின் எக்ஸ்பிரஷன்ஸ் அல்டிமேட்டா இருக்கும். இந்தப் பாட்டு ஒலிக்கும்போதெல்லாம், வினிதாவின் நினைவுகள் ரசிகர்கள் மனசில் நிழலாடுவதோடு, அவர் தொடர்ந்து சினிமால நடிச்சிருக்கலாமேன்னு நினைக்கத் தூண்டும்.
ஆரம்பம் இருந்தால், முடிவும் இருக்கும்தானே? ஆனால், அப்படியான முடிவு, வினிதாவின் சினிமா கரியரில் வேக வேகமாக நடந்தது. அதுக்கான இந்த இரண்டு காரணங்களைத்தான் நம்மால் அனுமானிக்க முடிகிறது. ஒன்று தனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டர்களில் வினிதா நன்றாக ஸ்கோர் பண்ணியிருந்தாலும், அவரின் நடிப்புத் திறமையை வினிதாவோட கிளாமரே மறைத்ததென சொல்லலாம். இரண்டாவது காரணம், அவர் நடித்த பல படங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாயகிகள் இருந்தனர். வினிதாவின் ஈகோ இல்லாத இயல்போ அல்லது அவருக்குச் சரியான வழிகாட்டல் இல்லாததோ இதற்குக்கு காரணமா இருந்திருக்கலாம். எது எப்படியோ, ஒருநாள் திடீரென காணாமல் போனார் வினிதா.
இந்த நிலையில்தான் ‘வினிதாவா இப்படி?’னு ஒட்டுமொத்த தமிழ்நாடே பதறும் அளவுக்கு அதிரடியான செய்திகள் ஒளிபரப்பாகின. ‘வினிதா பாலியல் தொழில் செய்துகொண்டிருக்கிறார்’ அப்படிங்கிறதுதான் அந்தச் செய்தி.
செய்தியின் பின்னணியில காவல்துறையினரால கைது செய்யப்பட்டு முகத்தை மறைத்தபடி நடந்து வந்தவர், ‘வினிதாவா இது’ எனக் கேட்கிற அளவிற்கு உருவத்தில் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்தார். அதன்பிறகு வந்த செய்திகள் எல்லாமே, ஒரு பெண்ணா வினிதாவோட வாழ்க்கையில நடந்திருக்கக் கூடாதவை. தான் ஃபீல்டு அவுட் ஆனதால், தன் தம்பியை வைத்துப் படமெடுக்க வினிதா முயற்சி செய்ததாகவும், வினிதாவின் இந்தத் தேடலையே தூண்டிலாக வைத்து, அவரை பாலியல் ரீதியாகப் பலரும் பயன்படுத்திக்கிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்தச் சம்பவம் தொடர்பாக வினிதா கேட்ட ரெண்டு கேள்விகள் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை.
போலீஸார் தன்னைக் கைது செய்கிற, “என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்த ஆண்களை நீங்க எதுவுமே செய்ய மாட்டீங்களா?”எனக் கேட்டு வினிதா கதறி அழுதார். தனக்கு ஜாமீன் கிடைத்த பிறகு, வினிதா பேட்டி கொடுத்தார். அப்போ, “என் தம்பியை ஒரு படத்துல ஒப்பந்தம் செய்யுற விஷயமாதான் நான் அங்க போனேன். அதனாலதான், என் தம்பியையும் அம்மாவையும் கூட்டிக்கிட்டுப் போனேன். எல்லோரும் சொல்ற மாதிரி நான் பாலியல் தொழில் பண்றதுக்காக போயிருந்தேன்னா குடும்பத்தையேவா கூட்டிட்டுப் போவேன்?” எனக் காத்திரமாகக் கேள்வி எழுப்பியிருந்தார்.
‘காஸ்ட்டிங் கவுச்’ தொடர்பா நடிகைகளோட குரல் ஓங்கி ஒலிக்கிற இந்தக் காலகட்டத்துடன், வினிதா 2003-ம் வருடம் கேட்ட அந்த இரு கேள்விகளை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டியது அவசியமாகிறது. ஏன்னென்றால், வினிதாவின் ‘கையறுநிலையும் கண்ணீர்த்துளிகளும்’ அந்தக் காலகட்டத்தில் எவ்வளவு சுலபமாகக் கடந்து செல்லப்பட்டிருக்கும் என்பது பலருக்கும் புரிந்திருக்கும்.
2003-ல் கைது செய்யப்பட்டு ஜாமீன்ல வெளிவந்த வினிதாவை, 2004-ம் வருடம் குற்றமற்றவர் என நீதிமன்றம் விடுதலை செய்தது. அதன்பிறகு நான்கு வருடங்கள் கழித்து, ‘எங்க ராசி நல்ல ராசி’ என்கிற படத்தில் கேரக்டர் ரோலில் நடித்திருந்தார் வினிதா. ஒரு நட்சத்திரம் மின்னி மறைவதுபோல, திரையுலகை விட்டுக் கடந்துபோனார் வினிதா. ‘புது நிலவு’ பாடல் வரிகளைபோலவே, வினிதாவின் அழகு முகமும், பச்சரிசி பல் சிரிப்பும் என்றென்றும் ரசிகர்களின் மனதில் புத்தம்புது நிலவுபோலவே பிரகாசிக்கும்.