“சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு…" – தேவசம் போர்டு சொல்லும் முக்கிய தகவல்!

18 மணி நேர தரிசனம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டலகால பூஜைகளுக்காக வரும் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. இந்த நிலையில் மண்டலகால மகரவிளக்கு பூஜை காலங்களில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள், பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், “மண்டலகால பூஜைகளின் போது கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்கள் முன் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பத்தாயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் செய்துகொள்ளலாம். பம்பா, எருமேலி, வண்டிப்பெரியார் ஆகிய மூன்று இடங்களிலும் ஸ்பாட் புக்கிங் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். அதிகாலை 3 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்படும். தினமும் 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனம் நடத்தும் விதமாக திருநடை திறக்கப்பட்டிருக்கும்.

ஆதார் கார்டு அவசியம்…

ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் செய்ய வரும் பக்தர்களும் கையில் ஆதார் கார்டு எடுத்துவரவேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி பஸ் புக்கிங் செய்யவும் ஆன்லைனில் லிங்க் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிலக்கல் பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் உள்ள டோலில் பாஸ்ட்டிராக்  வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அது போன்று சபரிமலைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை கணக்கெடுக்கும் விதமாக ஆட்டோமேட்டிக் வெகிகிள் நம்பர் பிளேட் டிஜிடெஷன் சிஸ்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்..

மண்டல பூஜை காலத்தில் முதல் கட்டமாக 383 சிறப்பு பேருந்துகளும் இரண்டாம் கட்டமாக 550 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் பேருந்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும். சபரிமலை வரும் பக்தர்களுக்கும், தினக்கூலி பணியில் ஈடுபடுபவர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கும் 5 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. விபத்தில் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் ரூபாய் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். அதற்கான பிரிமியம் தொகையை தேவசம்போர்டு செலுத்தும். சபரிமலை அமைந்திருக்கக்கூடிய பத்தனம்திட்டா மாவட்டம் மட்டுமல்லாது, இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா போன்ற பக்கத்து மாவட்டங்களில் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டாலும் காப்பீட்டு தொகை வழங்கப்படும்.

பதினெட்டாம்படி ஏறிச் சென்ற பிறகு பக்தர்கள் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். ஆன்லைனில் தரிசனத்துக்காக முன்பதிவு செய்துவிட்டு அந்த தேதியில் சபரிமலைக்கு வர இயலாத பக்தர்கள், முன்பதிவை ரத்து செய்து மற்ற பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் உதவ வேண்டும்” என்றார்.

நெரிசல் காரணம்..

கடந்த ஆண்டு மண்டலகால மகரவிளக்கு பூஜையின்போது பக்தர்கள் நெரிசலால் பல குழறுபடிகள் ஏற்பட்டன. அதற்கு பதினெட்டாம் படியை ஒட்டி புதிதாக அமைக்கப்பட்டுள்ள தூண்கள்தான் காரணம் எனவும். தூண்கள் காரணமாக பதினெட்டாம் படியில் பக்தர்கள் செல்லும் அகலம் குறைந்துவிட்டதால், குறைந்த அளவு பக்தர்கள் அதில் ஏறிச்செல்லும் நிலை ஏற்பட்டதே நெரிசல் அதிகரிக்க காரணம் எனவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சபரிமலை ஐயப்ப சுவாமி.கோயில்

வரும் மண்டல காலத்தில் பக்தர்களை விரைந்து பதினெட்டாம் படியில் ஏற்றிவிடும் விதமாக அனுபவம் வாய்ந்த போலீஸாரை பணியில் அமர்த்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் கைகளை பிடித்து படியில் ஏற்றிவிடும் போலீஸார் சோர்வடையாமல் இருக்க சத்தான உணவு வழங்கவும் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. பதினெட்டாம் படியில் பணியில் இருக்கும் போலீஸாருக்கு பூஸ்ட், ஹார்லிக்ஸ் மற்றும் நேந்திரம் பழம், பிஸ்கட் உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கவும் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பதினெட்டாம் படியில் பணியில் இருக்கும் போலீஸாருக்கு குறைந்த நேரம் பணி வழங்கி பின்னர் ஓய்வு எடுக்க அதிக சமயம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.