ஜெலன்ஸ்கியுடன் எலான் மஸ்க்கை பேச வைத்த ட்ரம்ப் – முக்கிய பொறுப்பு காத்திருக்கிறதா?

வாஷிங்டன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்கை அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப் பேசவைத்தது விவாதப் பொருளாகியுள்ளது. ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி உரையாடலில் எலான் மஸ்க்கும் இடம்பெற்றார் என்பதை உக்ரைன் நாட்டின் உயர் அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

“அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், எலான் மஸ்க்கை எனது தலைமையிலான அரசில் முக்கிய பொறுப்பில் அமர வைப்பேன்” என்று ட்ரம்ப் எற்கெனவே கூறியிருந்தார். தற்போது ட்ரம்ப் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடனான உரையாடலின் போது, எலான் மஸ்க்கையும் ட்ரம்ப் பேச வைத்திருக்கிறார். இது புதிய அரசில் எலான் மஸ்க் எத்தகைய முக்கியத்துவத்தைப் பெறுவார் என்பதை உணர்த்துகிறது.

முன்னதாக, அமெரிக்காவின் அண்டை நாடான கனடாவின் அரசியல் குறித்து சில ஷாக் கருத்துகளை மஸ்க் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் மஸ்க், “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வீழ்ச்சி தொடங்கிவிட்டது. அடுத்து நடைபெறவுள்ள கனடா நாட்டு தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார். தேர்தலுக்குப் பின்னர் அவர் காணாமல் போய்விடுவார்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது ஜெலன்ஸ்கியுடனான ட்ரம்பின் உரையாடலில் இடம்பெற்று இன்னொரு அதிர்வலையை மஸ்க் ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாது உக்ரைன் அதிகாரி ஒருவர் ஊடகப் பேட்டியில், “ஜெலன்ஸ்கி – ட்ரம்ப் தொலைபேசி உரையாடலின்போது எலான் மஸ்க்கும் பேசியது உண்மை. ட்ரம்ப் பேசிவிட்டு தொலைபேசியை மஸ்க்கிடம் கொடுத்தார். உக்ரைனுக்கு ஸ்டார்லிங் சேவைகளை வழங்கியமைக்காக ஜெலன்ஸ்கி அவருக்கு நன்றி தெரிவித்தார். ஆனால் முக்கியமான பேச்சுவார்த்தை ட்ரம்ப்புடன் தான் நடந்தது. இருப்பினும் இந்த பேச்சுவார்த்தையின்போது போர் தொடர்பான விவகாரங்கள் ஏதும் விவாதிக்கப்பவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலேயே இந்த பேச்சுவார்த்தை இருந்தது,” என்றார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்துக்காக எலான் மஸ்க் 110 மில்லியன் டாலர் வரை செலவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ட்ரம்ப் தன் பிரச்சார மேடைகளில் எலான் மஸ்குக்கு அமெரிக்க அரசில் ஆலோசகராக முக்கிய பொறுப்பு வழங்குவேன் என்றே முழங்கி வந்தார். அதை இப்போதே, பதவியேற்புக்கு முன்னரே ட்ரம்ப் துவக்கிவிட்டாரோ என எண்ணும் அளவுக்கு ஜெலன்ஸ்கியுடனான உரையாடலில் மஸ்க் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளார் என்று அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.