தீபாவளி பட்டாசு, மளிகை தொகுப்பு கூட்டுறவு துறை சார்பில் ரூ.20 கோடிக்கு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

கூட்டுறவுத் துறை சார்பில் தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு மற்றும் தீபாவளி சிறப்பு தொகுப்பு ஆகியவை ரூ.20.47 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அக்.31-ம் தேதி தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக கொண்டாடும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, கூட்டுறவுத்துறையின் மூலம் பட்டாசு மற்றும் ‘கூட்டுறவு கொண்டாட்டம்’ என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தரமான பட்டாசுகளை உற்பத்தி நிறுவனங்களிலிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து குறைந்த விலையில், 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 பட்டாசு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு ரூ.20.01 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவுத் துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப் பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை அக்.28 முதல் நடைபெற்றது.

இதில், பிரீமியம் மற்றும் எலைட் என 2 வகையாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், இனிப்புகள் செய்வதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய ‘அதிரசம் – முறுக்கு காம்போ’ என்ற விற்பனை தொகுப்பும் 20 ஆயிரம் எண்ணிக்கையில் ரூ.46 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. மொத்தம் கூட்டுறவுத்துறை மூலம் தீபாவளியை முன்னிட்டு ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், வரும் பொங்கல் திருநாளிலும் சிறப்பு விற்பனையை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீரிய முறையில் ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.