‘நோ செக்ஸ், மேரேஜ், கிட்ஸ்…’ – ட்ரம்ப் வெற்றியால் அமெரிக்காவில் வலுக்கும் ‘4பி இயக்கம்’

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப்பின் வெற்றி அங்குள்ள பெண்கள் பலருக்கு பிடிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், ட்ரம்பின் வெற்றியைத் தொடர்ந்து அமெரிக்கப் பெண்களில் பலரும் தென்கொரியாவின் ‘4பி’ இயக்கத்தில் இணைவதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் இப்போது ‘4பி இயக்கம்’ வலுத்துள்ளது.

செக்ஸ், டேட்டிங், திருமணம், குழந்தை என நான்கு விஷயங்களுக்கு பெண்கள் நோ சொல்லும் இந்த 4பி இயக்கம் (4B movement) ட்ரம்பின் வெற்றிக்குப் பின் இணையத்திலும் எழுச்சி கண்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்பின் வெற்றி ஆண் வாக்களார்களால் நடந்துள்ளது என்றும், அது தங்களின் இனப்பெருக்க உரிமை மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பு என்றும் பல அமெரிக்க பெண்கள் நம்புகின்றனர். இளம் அமெரிக்கப் பெண்கள் பலரும் ஆண்களைப் புறக்கணிப்பது பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். இதற்காக தென்கொரியாவின் பெண்கள் போராட்டாமான 4பி இயக்கத்தை அமெரிக்கப் பெண்கள் நாடத் தொடங்கியுள்ளனர். இது ஆண்களைப் புறக்கணிக்கும் போராட்டமாகும். தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பல அமெரிக்கப் பெண்கள் 4பி இயக்கத்தில் இணைவதாக அறிவித்துள்ளனர்.

அதிகம் தேடப்பட்ட 4பி இயக்கம்: அமெரிக்காவில் தேர்தல் முடிவடைந்த நாளில் இருந்தே 4பி இயக்கத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வந்தது. அதுகுறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டதுடன் சமூக வலைதளங்களில் அதற்கான ஹேஷ்டேகுகள் உருவாக்கப்பட்டன. எந்த அளவுக்கு என்றால், இந்த வாரத்தில் 48 மணிநேரத்தில் 4பி இயக்கம் குறித்து கூகுளில் 5,00,000 தேடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகளால் அதிருப்தி அடைந்த பல பெண்கள் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் போஸ்ட் செய்து, 4பி இயக்கத்தில் இணைவதாக தெரிவித்திருந்தனர்.

அமெரிக்காவில் தற்போது அதிகரிக்க காரணம்: தனது தேர்தல் பிரச்சாரம் முழுவதும் டொனால்டு ட்ரம்ப் கடந்த 2022-ம் ஆண்டு, ரோ vs வாடே வழக்கில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தின் வழங்கிய வரலாற்றுத் தீர்ப்பை கொண்டாடியபடியே இருந்தார். இந்தத் தீர்ப்பு நாடு தழுவிய அளவில் பெண்களின் கருகலைப்புக்கான உரிமையை தடை செய்கிறது. இதுவும் தேர்தல் நாளில் பல பெண்களை வாக்களிக்கத் தூண்டியது.

என்றாலும் பரபரப்பான அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸை தோற்கடித்து டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதன்மூலம் ஒரு பெண்ணைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் தங்களை ஆளலாம் என்கிற சில அமெரிக்க ஆண்களின் நம்பிக்கை மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இதனால்தான் தென்கொரியாவின் 4பி இயக்கம் எனும் ஆணாதிக்கத்துக்கு எதிரான இயக்கத்தின் மீதான ஆர்வம் தேர்தல் முடிந்த சில மணி நேரங்களில் அமெரிக்காவில் சூடுபிடிக்கத் தொடங்கியது எனக் கூறப்படுகிறது.

ஓர் இளம் பெண் தனது எக்ஸ் பக்கத்தில், “அமெரிக்க பெண்களே, கொரியாவின் 4பி இயக்கத்தால் தாக்கம் பெறும் நேரம் இது எனத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளர். மற்றொருவரும், அமெரிக்க பெண்களே கொரியாவின் 4பி இயக்கம் குறித்து அறிந்து அதனை கைகொள்ளும் நேரமிது என்று தெரிவித்துள்ளார். மூன்றாவது பெண்ணோ, தென்கொரியாவில் பெண்கள் இதனைச் செய்கிறார்கள். நாமும் அவர்களுடன் இணைந்து கொள்ளும் நேரமிது. ஆண்களுக்கு இனி வெகுமதிகள் கிடையாது அல்லது நம்மை அவர்கள் இனி அணுக முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

@lalisasaura என்ற பயனர் தனது எக்ஸ் பக்கத்தில், “பெண்களே, தென்கொரிய பெண்களைப் போல நாமும் 4பி இயக்கத்தை பற்றி பரிசீலிக்கவேண்டிய நேரமிது. அமெரிக்காவின் பிறப்பு விகிதத்தை அதிரடியாக குறைக்க வேண்டும். இனி திருமணம் இல்லை, குழந்தை பிறப்பு இல்லை, டேட்டிங் இல்லை, ஆண்களுடன் உறவும் இல்லை. இந்த ஆண்களை நாம் கடைசியாக சிரிக்கவும் அனுமதிக்க முடியாது. அவர்களைத் திருப்பித் தாக்கவேண்டும்” என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு இதுவரை 4,69,000 விருப்பங்கள், 75,000 ரீட்வீட்கள், 19.9 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

4 பி இயக்கம் என்றால் என்ன? – Bi என்றால் கொரிய மொழியில் இல்லை என்று பொருள். இது ஆண்களுடன் இணைந்து டேட்டிங், செக்ஸ், திருமணம், குழந்தை ஆகிய நான்கு விஷயங்களையும் மறுப்பதாகும். #MeToo இயக்கத்தைத் தொடர்ந்து கடந்த 2018-ல் இந்த இயக்கம் மிகவும் தீவிரமடைந்தது. பெண் வெறுப்பு, பாலினப் பாகுபாடு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்க்கும் வழிமுறையாக மாறியதாக முனைவர் பட்ட ஆய்வாளர் மீரா சோய் கூறுகிறார்.

மேலும் அவர், “தென்கொரியாவின் 4பி இயக்கம், சமீப ஆண்டுகளில் சர்வதேச அளவில் ஆர்வத்தையும் பிரபலத்தையும் பெற்று வருகிறது. குறிப்பாக இளம் பெண்கள் மத்தியில் அதுகுறித்து தேடும் ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.