குவெட்டா: பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்த பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராகநீண்ட காலமாக ஆயுத போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த சூழலில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறிவைத்து நேற்று காலை தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.
குவெட்டா ரயில் நிலையத்தில் காலை 8.30 மணி அளவில் ஏராளமான ராணுவ வீரர்கள் காத்திருந்தனர். அப்போது, பெஷாவர் செல்லும் விரைவு ரயில் அங்கு வந்தது. ராணுவ வீரர்கள் மற்றும் ஏராளமான பயணிகள் அதில்ஏற முயன்றனர். அப்போது, ராணுவத்தினரை குறிவைத்து, பயணிகள் கூட்டத்தில் இருந்த தற்கொலை படைதீவிரவாதி ஒருவன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இதில் 16 ராணுவ வீரர்கள் உட்பட 27 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 46 வீரர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விடுதலை படை பொறுப்பேற்பு: இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை படை என்ற தீவிரவாத அமைப்பு, பொறுப்பேற்றுள்ளது. ‘பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படவில்லை. ராணுவ வீரர்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தினோம்’ என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
10 கிலோ வெடிகுண்டு: தாக்குதல் குறித்து குவெட்டா போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: குவெட்டா – பெஷாவர் ரயில் வழித்தடத்தில் உள்ள முக்கிய பாலத்தை தீவிரவாதிகள் கடந்த ஆகஸ்ட் 26-ம்தேதி குண்டு வைத்து தகர்த்தனர். இதன்காரணமாக, இரு நகரங்கள் இடையே ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
புதிதாக ரயில்வே பாலம் கட்டப்பட்டு, கடந்த அக்டோபர் 11-ம் தேதிதான்குவெட்டா – பெஷாவர் இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்த நிலையில், பாதுகாப்பு படையினர், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தற்போது தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய தீவிரவாதி தனது உடலில் 10 கிலோ எடை உள்ளவெடிகுண்டுகளை சுமந்து வந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது. உயிரிழந்ததீவிரவாதியின் உடல் பாகங்கள், மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குவெட்டா ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஒரே ஆண்டில் 789 தாக்குதல்கள்: பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 789 தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. 1,524 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்கள். இந்த தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறும்போது, ‘‘குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்துள்ள தற்கொலை படை தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இதன் பின்னணியில் இருப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சர்பாஸ் நேற்று குவெட்டா நகரில் அவசரஆலோசனை கூட்டம் நடத்தினார். தற்கொலை படை தாக்குதல் குறித்து உயர்நிலை விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ளகுவாதர் நகரில் சீன அரசின் சார்பில்மிகப்பெரிய வர்த்தக துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. பலுசிஸ்தான் மாகாணத்தில் விவசாயம் மேற்கொள்ள சீனர்களுக்கு பெரும் பகுதி நிலமும் ஒதுக்கப்பட்டு வருகிறது. பலுசிஸ்தான் – சீனாவை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகளுக்கு பலுசிஸ்தான் மாகாண மக்கள்ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குவாதர் துறைமுக கட்டுமான பணிக்காக பாகிஸ்தானில் தங்கியுள்ள சீன பொறியாளர்களை குறிவைத்து பலுசிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்குமுறையால், பலுசிஸ்தானை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்து உள்ளனர்.
பாகிஸ்தான் பிடியில் இருந்துபலுசிஸ்தானை மீட்க கோரி கடந்தஅக்டோபர் இறுதியில் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் ஒரு மாத விழிப்புணர்வு பிரச்சாரத்தை பலுசிஸ்தான் மக்கள் தொடங்கினர். இதற்கு ஐரோப்பாவின் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் முழு ஆதரவு தெரிவித்துள்ளன.