குவெட்டா: குவெட்டா ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். 46 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) காலை நிகழ்ந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நகரத்தின் ஆணையர் ஹம்சா ஷஃப்கத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த தற்கொலைப்படை தாக்குதலை அடுத்து அனைத்து ரயில் சேவைகளையும் நிறுத்துமாறு ரயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இந்த தற்கொலைப் படை தாக்குதல் குறித்து தெரிவித்த குவெட்டா மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) முகமது பலோச், “சம்பவம் நிகழ்ந்தபோது அந்த இடத்தில் சுமார் 100 பேர் இருந்தனர். குவெட்டாவில் இருந்து பெஷாவருக்கு ஜஃப்பார் எக்ஸ்பிரஸ் புறப்பட தயாராக இருந்தபோது பிளாட்பாஃமில் இந்த தற்கொலைப் படை தாக்குதல் நடந்துள்ளது. ரயில் நிலையத்தில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (Balochistan Liberation Army) எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதற்கு முன் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி கோல்பூர் – மாச் இடையேயான ரயில் பாதையில் ரயில்வே பாலம் ஒன்று இதே அமைப்பால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதையடுத்து, அன்றைய தினம் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் மாகாண முதல்வர் சர்பராஸ் புக்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்பாவி பொதுமக்கள் குறிவைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மனிதர்கள் என கூறுவதற்கான தகுதியை இழந்தவர்கள் பயங்கரவாதிகள் என்றும் மிருகங்களைவிட கீழானவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். பலுசிஸ்தானில் பயங்கரவாதம் வேரோடு பிடுங்கி எரியப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்த சிசிடிவி கேமரா வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதில், குவெட்டா ரயில் நிலையத்தில் நடைமேடையில் மக்கள் நின்றுகொண்டும் அமர்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அப்போது திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தீ பிழம்பு ஏற்பட்டு மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடும் காட்சிகள் உள்ளன.