இஸ்லாமபாத்: பாகிஸ்தானின் குவெட்டா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இதில், 16 ராணுவ வீரர்களும் அடங்குவர். இந்தச் சம்பவத்தில் இதுவரை 62 பேர் காயமடைந்தனர்.
பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவில் உள்ள ரயில் நிலையத்தில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களை குறிவைத்து சனிக்கிழமை தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. குவெட்டா ரயில் நிலையத்தில் ஏராளமான ராணுவ வீரர்கள் காத்திருந்தனர். அப்போது பெஷாவர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அந்த ரயிலில் ராணுவ வீரர்கள் ஏற முயன்றனர். அவர்களை குறிவைத்து கூட்டத்தில் இருந்த தற்கொலைப் படை தீவிரவாதி வெடித்துச் சிதறினார்.
இதில் 16 ராணுவ வீரர்கள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். 46 ராணுவ வீரர்கள் உட்பட 62 பேர் படுகாயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.. பலுசிஸ்தான் விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பு தற்கொலைப் படை தாக்குதலுக்கு பொறுப்பேற்று உள்ளது. ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பின்புலம்: பாகிஸ்தானின் 4 மாகாணங்களில் ஒன்று பலுசிஸ்தான். இது, அந்த நாட்டின் நிலப்பரப்பில் 48 சதவீதத்தை கொண்டுள்ளது. எண்ணெய் வளம், இயற்கை எரிவாயு, நிலக்கரி, செம்பு, தங்க சுரங்கம் என இயற்கை வளங்கள் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தின் வளங்களை பாகிஸ்தான் அரசு சுரண்டுகிறது. அந்த மாகாண மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த காலத்தில் கலாட் (பலுசிஸ்தானின் பழைய பெயர்) தன்னை தனி நாடாக அறிவித்தது.
கடந்த 1948-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி கலாட் பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. அப்போது முதல் பலுசிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.