மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பாபா சித்திக்கை கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி 3 பேர் சுட்டுக் கொன்றனர்.
இதுதொடர்பாக இதுவரை 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் பஞ்சாப், உ.பி., புனேவை சேர்ந்தவர்கள். அவர்களில் 14 பேர் சிறையில் உள்ளனர். மற்ற 4 பேர் போலீஸ் காவலில் விசாரணையில் உள்ளனர். இந்நிலையில், புனேவைச் சேர்ந்த ஆதித்ய குலாங்கர் (22), ரபீக் ஷேக் (22) ஆகிய 2 பேரை போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சித்திக்கை கொலை செய்ய ரூபேஷ் மொகோல் (22), சிவம் கோகெட் (20), கரண் சால்வே (19), கவுரவ் அபுனே (23) ஆகிய 4 பேருக்கும் தலா ரூ.25 லட்சம், கார், வீடு தருவதாகவும், துபாய் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வதாகவும் ராம்பூல்சந்த் கனோஜியா (43) என்பவர் உறுதி அளித்துள்ளார். இந்த தகவலை 4 பேரும் விசாரணையில் கூறினர்.
மேலும், பஞ்சாபின் ஜலந்தரை சேர்ந்த ஜீசன் அக்தர் (23) என்ற இளைஞரிடம் இருந்துதான் கனோஜியா பணத்தை பெறுவார் என்று கூறினர். இதையடுத்து கனோஜியா மற்றும் ஜீசன் அக்தரையும் கைது செய்துள்ளோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.