அகோலா: எங்கு எல்லாம் காங்கிரஸ் ஆட்சி அமைகிறதோ, அந்த மாநிலங்கள் அக்கட்சியின் ராஜ வம்சத்தின் ஏடிஎம்-களாக மாறிவிடுகின்றன என்று பிரதமர் மோடி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினார். மேலும் மகாராஷ்டிராவை காங்கிரஸின் ஏடிஎம் ஆக மாறவிட மாட்டோம் என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அகோலாவில் நடந்த பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மகாராஷ்டிராவை காங்கிரஸ் கட்சியின் ஏடிஎம் ஆக மாற விடமாட்டோம். காங்கிரஸ் கட்சியின் ராஜவம்சத்துக்கு நான் சவால் விடுகிறேன். அவர்கள் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பஞ்சதீர்த்தங்களுக்கு சென்றிருக்கிறார்களா?.
நாட்டைப் பலவீனப்படுத்தினால் தான் தாங்கள் பலம் அடைய முடியும் என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும். ஒரு சமூகத்தினரை மற்றவர்களுக்கு எதிராக நிறுத்துவதே அக்கட்சியின் கொள்கை. மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி என்பதற்கு ஊழல் மற்றும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முறைகேடு என்று பொருள்.
பிரதமராக பதவி வகித்த இரண்டு முறை ஆட்சி காலத்தில் நான் ஏழைகளுக்கு நான்கு கோடி வீடுகள் வழங்கியுள்ளேன். இப்போது மகாராஷ்டிரா தேர்தலுக்காக பாஜக தலைமையிலான கூட்டணிக்காக உங்களின் ஆசீர்வாதங்களை வேண்டி இங்கு வந்துள்ளேன். கடந்த 2019ம் ஆண்டு இதேநாளில் நாட்டின் உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் தொடர்பான தீர்ப்பினை வழங்கியது. இந்த நவம்பர் 9-ம் தேதியும் நினைவில் கொள்ளப்படும். ஏனென்றால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின்பு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்ளும் தங்களின் உணர்வு எழுர்ச்சியை காட்டினர்.
கடந்த 2014 முதல் 2024 வரையிலான பத்தாண்டு கால ஆட்சியில் மகாராஷ்டிரா மாநிலம் உளப்பூர்வமாக பாஜகவுக்கு ஆதரவு தந்துள்ளது. பாஜக மீதான மகாராஷ்டிராவின் நம்பிக்கைக்கு ஒரு காரணம் உண்டு. அது மகாராஷ்டிரா மக்களின் தேச பக்தி அரசியல் புரிதல் மற்றும் தொலைநோக்குப்பார்வையை. இவ்வாறு பிரதமர் பேசினார்.