மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட இருந்த ரூ.588 கோடி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல்

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 14 மாநில இடைத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.588 கோடி மதிப்பிலான பணம், பரிசுபொருள், மது பானங்கள் மற்றும் போதைப் பொருட்களை தேர்தல் ஆணையம் கைப்பற்றியது.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல், 14 மாநிலங்களில் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. அப்போது வாக்காளர்களை கவர பணம் மற்றும் பரிசு பொருட்கள், மது பானங்கள், போதைப் பொருட்கள் கொடுக்கப்படுவதை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது. அதன்படி பாதுகாப்பு படையினர் பல குழுக்களை அமைத்து மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் இடைத் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சோதனையில் ரூ.90.5 கோடி மதிப்பில் விலையுயர்ந்த ஆபரணப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்கம் ரூ.73.1 கோடி கைப்பற்றப்பட்டது. மது மற்றும் போதைப் பொருட்கள் ரூ.38 கோடி மதிப்பில் கைப்பற்றப்பட்டன. வாக்காளர்களுக்கு பரிசாக வழங்க ரூ.42.5 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரூ.128 கோடி மதிப்பில் இலவச பரிசு பொருட்கள், ரொக்கம் ரூ.10.5 கோடி, ரூ.9 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.7.1 கோடி மதிப்பிலான மது பானங்கள், ரூ.4.2 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இரு மாநிலங்களிலும் பறிமுதல் செய்யப்பட்டதை ஒப்பிட்டால், கடந்த சட்டபேரவை தேர்தலின் போது கைப்பற்றியதைவிட பல மடங்கு அதிகம் இருந்தது. மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ரூ.103.6 கோடி மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் அங்கு இதுவரை கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மதிப்பு ரூ.280 கோடியை எட்டிவிட்டது. ஜார்கண்ட்டில் 2019-ம் ஆண்டு ரூ.18.8 கோடி மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், அங்கு தற்போது ரூ.158 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2 மக்களவை தொகுதிகள் மற்றும் 48 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர். இதில் இதில் ரூ.70.6 கோடி மதிப்பிலான பொருட்கள், ரூ.21.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.9.4 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி பொருட்கள், ரூ.8.9 கோடி ரொக்கம், ரூ.7.6 கோடி மதிப்பிலான மது பானங்கள் என மொத்தம் ரூ.118 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டன.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், மற்றும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 14 மாநிலங்களில், மொத்தம் ரூ.588 கோடி மதிப்பில் பணம் மற்றும் பொருட்களை தேர்தல் ஆணையம் கைப்பற்றியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.