மேற்கு வங்கத்தில் செகந்திராபாத் – ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து

கொல்கத்தா: செகந்திராபாத்-ஷாலிமார் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்று பெட்டிகள் மேற்கு வங்கத்தின் ஹவுரா அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

செகந்திராபாத் – ஷாலிமார் வாராந்திர சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், கரக்பூர் பிரிவில் உள்ள நல்பூர் ரயில் நிலையம் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது,இன்று (சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) அதிகாலை 5.30 மணியளவில் 3 ​​பெட்டிகள் தடம் புரண்டதாக தென்கிழக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்க மாநிலம் ஹவுரா அருகே இந்த விபத்து நேரிட்டதாக அவர்கள் கூறினர்.

“கொல்கத்தாவில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள நல்பூரில் வாராந்திர சிறப்பு ரயில் தடம் புரண்டது. தடம் புரண்ட பெட்டிகளில் 2 பயணிகள் கோச்சும், ஒரு பார்சல் வேனும் இருந்தது. விபத்தில் உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை. பயணிகள் தங்கள் பயணத்தை தொடர 10 பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று தென் கிழக்கு ரயில்வே அதிகாரி ஓம் பிரகாஷ் சரண் தெரிவித்துள்ளார்.

விபத்தை அடுத்து, விபத்து நிவாரண ரயில் மற்றும் மருத்துவ நிவாரண ரயில்கள் சந்த்ராகாச்சி மற்றும் காரக்பூரில் இருந்து உதவிக்காக உடனடியாக அனுப்பப்பட்ட நிலையில், தற்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணிகளை கொல்கத்தாவிற்கு ஏற்றிச் செல்ல பேருந்துகளும் அனுப்பப்பட்டுள்ளன.

விபத்து தொடர்பான உதவி எண்களை ரயில்வே அறிவித்துள்ளது. தேவைப்படுவோர் காரக்பூர் – 63764 மற்றும் 032229-3764 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.