பிஷ்ராம்பூர் (ஜார்க்கண்ட்): ஜார்க்கண்ட்டில் ‘வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு’ பிறக்கும் குழந்தைகளுக்கு பழங்குடியினருக்கான உரிமைகள் வழங்கப்பட மாட்டாது என்று பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாலமு மாவட்டத்தில் உள்ள பிஷ்ராம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ஜெய பிரகாஷ் நட்டா, “ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தலைமையிலான அரசாங்கம், வங்கதேசத்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். அதோடு, வங்கதேசத்தைச் சேர்ந்த தந்தைக்கும், ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த ஆதிவாசி தாய்க்கும் பிறக்கும் குழந்தைகளுக்கு பழங்குடியினருக்கான உரிமைகள் வழங்கப்பட மாட்டாது. மேலும், ஊடுருவல் தொடர ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
ஜேஎம்எம் தலைமையிலான அரசாங்கத்தின் ஒரு பகுதியாக ஊழல்வாதிகளும், திருடர்களும் இருக்கிறார்கள். ஜார்க்கண்டில் தற்போதுள்ள ஒற்றை இன்ஜின் அரசாங்கத்தை அகற்றி, இங்கு இரட்டை இன்ஜின் ஆட்சியை மீட்டெடுக்கும் நேரம் வந்துவிட்டது” என்று தெரிவித்தார்.