விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஆய்வு செய்த முதல்வரிடம், வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும் என பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
விருதுநகரில் நாளை நடைபெறும் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக இன்று (நவ.9) விருதுநகர் வந்த முதல்வர் ஸ்டாலின், விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூர் மேலசின்னையாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலைக்கு நேரில் சென்று பட்டாசு ஆலையில் ஆய்வு செய்து தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். இது குறித்து முதல்வரிடம் பேசிய பட்டாசு தொழிலாளி இசக்கியம்மாள் கூறுகையில், “முதல்வர் பட்டாசு உற்பத்தி குறித்தும், விபத்து எதும் நடந்துள்ளதா, மாதம் ரூ.1,000 மகளிர் உரிமை தொகை முறையாக வருகிறதா?, உங்களுக்கு ஏதும் குறைகள் உள்ளதா? எனக் கேட்டார்.
எங்களது ஆலையில் இதுவரை விபத்து ஏதும் நடக்கவில்லை. விபத்தில் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டால், எங்களது குழந்தைகள் படிப்புச் செலவை அரசு ஏற்க வேண்டும். மேலும், எனக்கு இருமுறை விண்ணப்பித்தும் மகளிர் உரிமைத் தொகை வரவில்லை. சொந்த வீடு இல்லை. பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. வீடு வழங்க வேண்டும், என முதல்வரிடம் தெரிவித்தேன்.அதற்கு முதல்வர், பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். விடுபட்டவர்களுக்கு மகளிர் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
பட்டாசு ஆலை உரிமையாளர் நாகராஜன் கூறுகையில், “எங்களது பட்டாசு ஆலைக்கு திடீரென வந்த முதல்வர் ஸ்டாலின் பட்டாசு ஆலையில் ஆய்வு செய்து, தொழிலாளர்களிடம் கலந்துரையாடி குறைகளைக் கேட்டறிந்தார். முதல்வர் வருகையால் பட்டாசு தொழிலுக்கு விடிவு வரும் என நம்புகிறோம்” என்றார்.