விருதுநகர் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு: பட்டாசு ஆலையில் ஆய்வு

விருதுநகர்: பல்வேறு நிகழ்ச்சிகளில் இரண்டு நாள் பயணமாக விருதுநகர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதல்வர் ஸ்டாலின், அங்குள்ள மதன் பட்டாசு தொழிற்சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொழிலாளர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

உற்சாக வரவேற்பு: விருதுநகர் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (நவ.9) விருதுநகர் வந்தார்.

அவருக்கு விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மதுரை – விருதுநகர் மாவட்ட எல்லையான சத்திரரெட்டியபட்டியில் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு திமுகவினர் சாலை ஓரத்தில் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.அப்போது முதல்வர் ஸ்டாலின் சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் உள்ள மதன் பட்டாசு தொழிற்சாலையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். கன்னிசேரி புதூர், மேலச்சின்னையாபுரத்தில் உள்ள மதன் பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையை முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தொழிற்சாலை பெற்றுள்ள உரிமச் சான்றினை ஆய்வு செய்து, அங்கு பட்டாசுகள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருட்கள் வைப்பறை, தயாரிக்கப்படும் இடங்கள், பட்டாசுகள் வைப்பறை, மைக்ரோ கார்டு திரி வைப்பறை போன்ற இடங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சுமார் 80 பேர் பணிபுரியும் இத்தொழிற்சாலையில், 36 பெண்கள் பணியாற்றிவரும் நிலையில், அவர்களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார்.

இப்பட்டாசு தொழிற்சாலை இதுவரையில் விபத்து ஏற்படாமல் மிகுந்த பாதுகாப்புடன் செயல்பட்டுவருவதை கேட்டறிந்த முதல்வர், அனைத்து தொழிற்சாலைகளிலும் பசுமையான சூழலைப் பராமரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தவும் அறிவுறுத்தினார்.

மேலும், இந்நிறுவனத்தின் உரிமையாளரிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்புக்கான முறையான காப்பீடு வசதியினை செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், இத்தொழிற்சாலைக்கு வெளியே திரளாக கூடியிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

இன்று மாலை 5 மணிக்கு விருதுநகரில் ரோடு ஷோ நடத்தும் முதல்வர், மாலை 6 மணிக்கு தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். நாளை காலை ரூ.77 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை திறந்து வைக்கும் முதல்வர், அதன்பின் விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நடைபெறும் விழாவில் 35 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா உட்பட ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.