நம் தலைநகர் டெல்லியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஆட்டோ எக்ஸ்போ தெரியும்தானே! அதைப்போன்று இத்தாலியில் EICMA (Esposizione Internazionale Ciclo Motociclo e Accessori) என்றொரு ஆட்டோ ஷோ நேற்றிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது.
ஏப்ரிலியா என்றாலே தரம்தான். அதுவும் அந்த இத்தாலிய மேக் இருக்கே… வாவ்! ஏப்ரிலியாவைக் கேட்டாலே சொல்லிவிடுவார்கள். என்ன, அந்த ஒரு விஷயம்தான் பயமுறுத்தும். அது கட்டுரையோட கடைசியில் சொல்கிறேன்.
இந்த EICMA ஷோவில் ஏப்ரிலியாவும் தன் பங்குக்குக் களமிறங்கியது. இத்தாலியன் மேக்தான்; ஆனால் இதுவும் ஓர் இந்தியா மேக் பைக்காகவே வருவதுதான் ஸ்பெஷல். ஆம், நம் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பாராமிட்டி தொழிற்சாலையில்தான் RS 457 தயாரிக்கப்படுகிறது. அங்கேதான் இந்த டுவாேனோ 457 (Tuono 457) பைக்கும் ரெடியாகப் போகிறது. உங்களுக்கு RS 457 பைக் பற்றித் தெரியும்தானே! இது ஓர் அல்ட்ரா மாடர்ன் ஸ்போர்ட்ஸ் பைக். அந்த பைக்கின் பல அம்சங்களை இதில் கொண்டு வரப் போகிறார்கள்.
அப்போ எதுக்கு பேரை மாத்தணும் என்றால்? விஷயம் இருக்கு! முன்னது, ஃபுல்லி ஃபேர்டு… அதாவது ஃபேரிங் வைத்த மோட்டார் சைக்கிள். இது ஒரு நேக்கட் ஸ்போர்ட் பைக். RS பைக்கில் குனிந்து ஓட்டும்படி ஸ்போர்ட்டியான ரைடிங் பொசிஷன் இருக்கும் என்றால், இந்த டுவானோ பைக்கில் கொஞ்சம் உயரமான ரைடிங் பொசிஷன் கிடைக்கும். புதிய ஹெட்லைட் இதன் புதிய வரவு.
பார்ப்பதற்கே நல்ல பல்க்கியாக பாகுபலி மாதிரி இருக்கிறது டுவோனா. இந்தப் பெயரில் 660 சிசி பைக் ஒன்று வெளிநாடுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் இன்ஸ்பிரேஷன்தான் இதுவும். RS 457 பைக்கில் இருக்கும் அதே பேரலல் ட்வின் இன்ஜின் செட்அப், அதே ஃப்ரேம், சஸ்பென்ஷன், பிரேக்குகள் மற்றும் எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் எல்லாமே அதே! முன் பக்கம் இரட்டை எல்இடி லைட்கள், டுவானோவுக்கு அழகு. நடுவே பெரிய ஹெட்லைட் பளீர்! இதற்குக் கீழ் ஏரோ டைனமிக்ஸுக்கு உதவும் விங்லெட்கள் வாவ்! சின்ன டுவானோ மாதிரி இல்லை; ஆனால் பெரிய RS என்று இதைச் சொல்லலாம்.
டேங்க் பல்க்கியாக இருக்கிறது. ஆனால், இதன் பெட்ரோல் டேங்க் வெறும் 12.7 லிட்டர். ஒரு 450 சிசி பைக்குக்கு இது எப்படிச் சரியாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் எடை மட்டும் அதே 175 கிலோ. இதை ஹேண்டில் பண்ண கொஞ்சம் ஜிம் பார்ட்டியாக இருப்பது அவசியம்.
இப்போதைக்கு இவ்வளவு தகவல்கள்தான்! அடுத்த ஆண்டில் இந்த டுவானோ 457 பைக்கை எதிர்பார்க்கலாம்.
முதல் பாராவில் சொன்ன அந்தக் கடைசி பாரா விஷயம் இதுதான்; ஆமாங்க விலையும் பராமரிப்பும்தான் அந்தப் பயமுறுத்தும் விஷயம்!