தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே சாம்சன் சதமடித்திருக்கிறார். அவரின் சதத்தின் மூலம் இந்தியாவும் சிறப்பாக வென்றிருக்கிறது. இந்நிலையில், ‘தனிநபர்களின் நலனை விட அணியின் நலனே முக்கியம்.’ என சாம்சன் பேசியிருக்கிறார்.
ஆட்டநாயகன் விருதை வென்ற சஞ்சு சாம்சன் பேசுகையில், ‘களத்தில் இன்று நான் ஆடிய ஆட்டத்தை வெகுவாக மகிழ்ந்து அனுபவித்தேன். நான் இப்போது நல்ல ஃபார்மில் இருக்கிறேன். அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கான ஒரு இன்னிங்ஸை ஆடியிருக்கிறேன். அட்டாக்கிங்காக அக்ரஸிவ்வாக முனைப்போடு ஆடவேண்டும் என்பதைத்தான் எங்களின் அணுகுமுறையாக வைத்திருக்கிறோம். தனிப்பட்ட ரெக்கார்டுகளை விட அணியின் நலனே முக்கியம். ஒரு மூன்று நான்கு பந்துகளை பார்த்து ஆடிவிட்டால் போதும் பவுண்டரிகளை அடித்துவிடலாம். சில நேரங்களில் இந்த அணுகுமுறை கைக்கொடுக்கும். சில நேரங்களில் கைக்கொடுக்காது. இன்று எனக்கு அது ஒர்க் அவுட் ஆனதில் மகிழ்ச்சி. தென்னாப்பிரிக்கா மாதிரியான வலுவான அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது சவாலான விஷயம். அப்படியிருக்க தொடரை வெற்றியோடு தொடங்கியதில் மகிழ்ச்சி.’ என்றார்.
கேப்டன் சூர்யகுமார் பேசுகையில், ‘சாம்சன் 90 களில் இருந்தபோதும் பவுண்டரியை குறிவைத்துதான் ஆடினார். தனிப்பட்ட நலனை முன்னிலைப்படுத்தாமல் அணியின் நலனையே முன்னிலைப்படுத்தினார். அப்படிப்பட்ட குணாதிசயம்தான் அணிக்கும் தேவை.’ என சஞ்சுவை வெகுவாக பாராட்டியிருந்தார்.
இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் திணறி வந்த சாம்சன் இப்போது டி20 ஐ போட்டிகளில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு சதங்களை அடித்துவிட்டார். இனி அவருக்கு அணியில் நிரந்தர இடம் கிடைக்கும் என நம்பலாம்.
இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடி இருக்கிறது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து இருக்கிறது.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கும் அதிரடி காட்டி அசத்திய சஞ்சு சாம்சனுக்கும் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.