அதிகாலையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்.. காசா முனையில் 17 பேர் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நடவடிக்கையாக காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். வான் தாக்குதல் மற்றும் தரைவழி காசாவின் பெரும்பாலான பகுதிகள் அழிந்துவிட்டன. காசாவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் போரினால் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலும் நெரிசல் மிகுந்த கூடார முகாம்களில் வாழ்கின்றனர். சில சமயம் முகாமில் உள்ள மக்களும் இஸ்ரேலின் வான் தாக்குதலில் பலியாகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலையில் வடக்கு காசா முனையில் உள்ள ஒரு முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுபற்றி காசா சிட்டியில் உள்ள அல்-அஹ்லி மருத்துவமனை இயக்குனர் பாதல் நயிம் கூறுகையில், ஜபாலியாவில் உள்ள நகர்ப்புற அகதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 பெண்கள் உள்பட 17 பேர் இறந்ததாகவும், அவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.

ஜபாலியாவில் ஒரு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இன்றைய தாக்குதல் ஹமாஸ் போராளிகளை குறிவைத்து நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறி உள்ளது. ஆனால், அதற்கான எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை.

இதேபோல் லெபானின் பெய்ரூட் நகருக்கு வடக்கே அல்மட் கிராமத்தில் இஸ்ரேல் இன்று நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியானது, ஹிஸ்புல்லா அமைப்பினர் செயல்படும் பகுதிகளில் இருந்து வெகு தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.