சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகம் என்று மெல்போர்னில் உள்ள பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில், தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார்.
பின்பு, அங்கிருந்து புறப்பட்டு மெல்போர்ன் நகரை சென்றடைந்தார். அங்கு வசிக்கும் தமிழர்கள் சார்பில் பள்ளியில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே பட்டப்படிப்பு படித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகமாக உள்ளது. இந்தியாவில் 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதம் பேர் பட்டம் பயில வேண்டும் என்ற இலக்கோடு புதிய கல்விக்கொள்கையை பிரதமர் கொண்டுவந்திருக்கிறார். ஆனால், தமிழகத்தில் ஏற்கெனவே 51 சதவீதம் பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெண்களும் பட்டம் படித்திருக்கிறார்கள்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு, வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் நலனுக்காக ஒரு தனி துறை உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த பகுதியில் வசிக்கும் தமிழர்களானாலும், அவர்களுக்கு சிறு இடர்பாடு ஏற்பட்டாலும் அதுகுறித்து, அந்தந்த நாடுகளில் இருக்கும் அயலக அணிகளின் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கப்பட்டால், எத்தனை கோடி ரூபாய்செலவானாலும்கூட, நம்முடைய தமிழ் சொந்தங்களை காப்பாற்றிகொண்டுவருகின்ற பணிக்காக ஓர் அமைச்சரே நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஒரு காலத்தில், ஏதேனும் ஒரு நாட்டுக்கு சென்றவர், அங்கேயே இறந்துவிட்டால், அவருடைய உடலை தமிழகத்துக்கு கொண்டுவருவதற்கு 5 மாதம் அல்லது 6 மாதங்கள் வரை ஆகும். ஆனால், இப்போது அயலக தமிழர் நல வாரியம் அமைத்ததன் மூலமாக மத்திய அரசின் வெளியுறவுத் துறையை உடனடியாக தொடர்புகொண்டு, மூன்றே நாட்களில், அந்த உடலை விமானத்தில் கொண்டுவருவதற்கான செலவை தமிழக அரசு ஏற்றுக்கொள்கிறது.
இணையவழியில் தமிழ் கற்கலாம்: இணையதளம் மூலமே நீங்கள் தமிழை கற்றுக்கொள்ளலாம். 1-ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான புத்தகங்கள் எவ்வளவுவேண்டும் என்பதை ‘தமிழர் குடும்பம்’ மூலமாக எங்களுக்கு கடிதம் எழுதினால், உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
தமிழகத்தில் ஆண்டுதோறும் ‘வெளிநாடுவாழ் தமிழர்கள் தினம்’ ஜனவரி மாதம் கொண்டாடப்படுகிறது. அப்போது நீங்கள் தமிழகத்துக்கு வரும்போது, உங்கள் கோரிக்கை மனுவை என்னிடம் அளித்தால், அதை முதல்வர் கவனத்துக்கு எடுத்துச்சென்று, அவற்றை செய்து கொடுப்பதற்கு தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.