பொகாரோ: இதர பிற்படுத்தப்பட்ட மக்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்சா – காங்கிரஸ் கூட்டணி பிரிக்கிறது என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பேசியது: “ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கூட்டணியின் சதி திட்டங்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சோட்டா நாக்பூர் பகுதியில் ஓபிசி பிரிவு மக்கள் இடையே 125 துணை பிரிவுகள் உள்ளன. துணைப் பிரிவினரை ஒருவருக்கு ஒருவர் எதிராக நிறுத்தி அவர்களின் ஒற்றுமையை உடைக்க ஜேஎம்எம் – காங்கிரஸ் கூட்டணி விரும்புகிறது. நீங்கள் ஒற்றுமையாக இருந்தால்தான், உங்களுக்கு பாதுகாப்பு. அதிகாரத்தை கைப்பற்ற அந்த கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லும்.
சுதந்திரம் பெற்றதில் இருந்தே எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி ஒற்றுமைக்கு எதிரான கட்சி காங்கிரஸ். அவர்களுக்குள் ஒற்றுமை இல்லாதவரை, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்து நாட்டை கொள்ளையடித்தது” என்று பிரதமர் மோடி கூறினார்.