புதுடெல்லி: கனடாவில் இந்து கோயில்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து டெல்லியில் கனடா தூதரகம் முன்பு நேற்று சீக்கியர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியும் கனடா குடியுரிமை பெற்ற காலிஸ்தான் தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு கனடாவில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கிடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கனடாவின் பிராம்டன் நகரில் உள்ள இந்து சபா கோயில் மீது கடந்த 3-ம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் அந்நாட்டில் உள்ள சில இந்து கோயில்கள் மீதும் இந்துக்கள் மீது தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலைக் கண்டித்து, இந்து சீக்கிய உலக அமைப்பு சார்பில் டெல்லியில் உள்ள கனடா தூதரகம் முன்பு நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான சீக்கியர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டனர். டீன் மூர்த்தி மார்க் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை மீற போராட்டக்காரர்கள் முயன்றனர்.
இதுகுறித்து இந்து சீக்கிய உலக அமைப்பின் தலைவர் தர்விந்தர் சிங் மர்வா கூறும்போது, “நாங்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை கூறவே இங்கு கூடியுள்ளோம். உண்மையான சீக்கியர் ஒருபோதும் காலிஸ்தானியாக இருக்க மாட்டார். காலிஸ்தான் தனி நாடு கோரிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நமது மூவர்ணக் கொடியும் நமது நாடும் எல்லா நேரங்களிலும் மதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளனர். காலிஸ்தானை நாங்கள் ஆதரிக்கவில்லை” என்றார்.