கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல்: எடியூரப்பா, ஸ்ரீராமுலு மீது வழக்கு பதிவு செய்ய முடிவு

பெங்களூரு: கர்நாடகாவில் கடந்த 2020-21-ம்ஆண்டில் கரோனா பெருந்தொற்று பாதிப்பின்போது பாதுகாப்பு உபகரணங்கள், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதில் அப்போதைய முதல்வர் எடியூரப்பா, சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீராமுலு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இந்நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு முதல்வராக சித்தராமையா பொறுப்பேற்ற பின்னர், இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தார். இந்த ஆணையம் கடந்த ஓராண்டாக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி, கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்தது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று கூறியதாவது: நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா ஆணையத்தின் அறிக்கையில் கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பது ஆதாரத்துடன் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அப்போதைய‌ முதல்வர்எடியூரப்பா, சுகாதாரத்துறை அமைச்ச‌ர் ஸ்ரீராமுலு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் அவர்கள் மீது வழக்கு தொடர பரிந்துரை செய்துள்ளது.

கரோனா பாதுகாப்பு கவசம் கொள்முதல் செய்ததில் அரசுக்கு நேரடியாக ரூ.14 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல்கட்ட அறிக்கையின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு முடிவெடுத்துள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர் ராமுலு மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் மீதுசட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா தனது விரிவான அறிக்கையை இன்னும் 6 மாதங்களில் சமர்ப்பிக்க இருக்கிறார். இவ்வாறு தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.

நீதிபதி குன்ஹாதான், தமிழகமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பரபரப்பான தீர்ப்பை பிறப்பித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.