புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத்தை தூண்ட, சமூக ஊடகங்களில் இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் வெளியிடுவது கடந்த ஒரு மாதமாக மிகவும் அதிகரித்துள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹன் வானி கடந்த 2016-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். அதன்பின் தீவிரவாத இயக்கங்களில் காஷ்மீர் இளைஞர்கள் சேர்வது பெருமளவில் குறைந்தது. தற்போது காஷ்மீரில் உள்ளூர் தீவிரவாதிகளின் எண்ணிக்கை 30-ஆகவும், வெளிநாட்டு தீவிரவாதிகளின் எண்ணிக்கை 75 முதல் 80-ஆக இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது சமூக ஊடகங்கள் மூலம் தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்க்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளதாக பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த குளிர் காலத்தில் ஆட்களை தேர்வு செய்து, அடுத்தாண்டு கோடை காலத்தில் தீவிரவாத தாக்குதல்களை அதிகரிக்க பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் தீவிர முயற்சி எடுத்து வருவதாக தெரிகிறது.
காஷ்மீரில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி வருவது தடுக்கப்பட்டது. தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கு அரசு வேலைகள், பாஸ்போர்ட்டுகள், ஓட்டுநர் உரிமம் ஆகியவை மறுக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கைகள் குறைந்தன.
ஆனால், தற்போது தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்க்கும் முயற்சிகள் சமூக ஊடகங்களில் அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவுக்கு எதிராக 2,016 தகவல்கள் பேஸ்புக், எக்ஸ், டெலிகிராம், டார்க் வெப் போன்ற சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. இது கடந்தாண்டின் இதே காலத்தில் 89 தகவல்கள் மட்டுமே வெளியாகியிருந்தன. தற்போது 22 மடங்கு அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் புதிய அரசு ஆட்சிக்கு வந்துள்ளது, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு தைரியத்தை கொடுத்துள்ளதா என பாதுகாப்பு முகமைகள் ஆய்வு செய்து வருகின்றன. காஷ்மீரில் காவல்துறையின் கட்டுப்பாடு துணை நிலை ஆளுநரிடம் இருந்தாலும், காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத்தை தூண்டலாம் என்ற எண்ணம் தீவிரவாத அமைப்புகளிடம் ஏற்பட்டுள்ளது போல் தெரிவதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் கருதுகின்றனர்.
சமீபத்தில் நடைபெற்ற காஷ்மீர் தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் தலைவர்கள் தேர்தலில் ஈடுபட்டனர். இவர்கள் மூலமாக காஷ்மீரில் மீண்டும் தீவிரவாதத்தை தூண்ட பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை சமீபத்தில் எச்சரிக்கை விடுத்தது.
பாகிஸ்தான் பகுதியிலிருந்து காஷ்மீருக்குள் ட்ரோன்கள் பறந்து வருவதும் அதிகரித்துள்ளது எனவும், இந்தாண்டில் இதுவரை 40 டிரோன்கள் கண்டறிப்பட்டதாகவும் பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.