சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் நோயால் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் கிராமம் முதல் நகரம் வரை தெரு நாய்களின் பெருக்கம் அதிகமாகவுள்ளது. சென்னையில், 1.70 லட்சம் உட்பட மாநிலம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது. தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்களின் கடியால் தினமும் பலர் பாதிக்கப் பட்டு வருகின்றனர். அதன்படி, தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
இதில், 36 பேர் வெறி நோய் என்ற ‘ரேபிஸ்’நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்தாண்டு 18 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இந்தாண்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல், பாம்பு கடியால் 16,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டபோது, “தமிழகத்திலுள்ள அனைத்து சுகாதார நிலையங்களிலும் விலங்குகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 24 மணி நேரமும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்கு வழங்கக் கூடிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பாம்பு கடிக்கான 10 ஏஎஸ்வி மருந்து குப்பிகள், நாய்க்கடிக்கான 20 ஏஆர்வி மருந்து குப்பிகள் வைக்கப்பட்டுள்ளன. பாம்பு, நாய் கடியால் பாதிக்கப்பட்டு வருவோருக்கு உடனடி சிகிச்சை அளிப்பதுடன், உரிய மருந்தும் வழங்கப் படுகிறது” என்றார்.