நோயாளிக்கு காகிதத்தில் ‘எக்ஸ் ரே’ பிரின்ட் கொடுத்ததாக புகார் – தென்காசி அரசு மருத்துவமனை விளக்கம்

தென்காசி: தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு காகிதத்தில் ‘எக்ஸ் ரே’ பிரின்ட் கொடுத்ததாக புகார் எழுந்திருக்கும் நிலையில், இச்சம்பவம் குறித்து மருத்துவமனை விளக்கமளித்துள்ளது.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த காளிப்பாண்டி என்பவருக்கு இருசக்கர வாகன விபத்தில் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ் ரே எடுக்கப்பட்ட நிலையில், எக்ஸ் ரே பிரின்டை காகிதத்தில் அளித்துள்ளனர். இதையடுத்து மருத்துவரை சந்திக்க சென்றபோது, மருத்துவர் இல்லாதால் அதிருப்தியடைந்த அவர், தனியார் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அங்கு, அந்த பிரின்டை கொண்டு சரியாக கண்டறிய முடியாது என்று மருத்துவர் கூறியதால் ரூ.500 செலவழித்து தனியார் ஆய்வகத்தில் எக்ஸ் ரே எடுத்து, சிகிச்சை பெற்றுள்ளார். இவரது புகார் சில ஊடகங்களில் வெளியானது. இது தொடர்பாக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே வசதி 15 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

எக்ஸ்ரே பிரிவில் நவீன வசதியாக பேக்ஸ் (PAX) என்னும் வசதி கடந்த ஒரு வருடமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது எக்ஸ் ரே பிரிவில் எடுக்கப்படும் எக்ஸ் ரே மருத்துவமனை வெளி நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை அரங்கு ஆகிய இடங்களில் உள்ள கணணியில் மருத்துவர்கள் உடனடியாக பார்க்கும்படி வசதி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் எக்ஸ்ரே எடுக்கும் நபர்களுக்கு எக்ஸ் ரே படம் வழங்குவதற்கு, அரசு நிர்ணயித்தபடி ஐம்பது ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு, வழங்கப்பட்டு வந்தது.

தற்போது அவர்களுக்கு கையிருப்பில் கட்டாயம் எக்ஸ்ரே பிலிம் வேண்டும் எனும் பட்சத்தில் மட்டும் 50 ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு வழங்கப்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு அவர்களுடைய பணம் தேவை இல்லாமல் செலவழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கத்தில் மட்டுமே இந்த வசதி நடைமுறைப்படுத்தப்பட்டு A 4 தாளில் பிரின்ட் எடுத்து கொடுக்கப்படுகிறது. A 4 தாளில் பிரின்ட் எடுத்து கொடுக்கப்படும் வசதி இலவசமாக செய்யப்படுகிறது.

எக்ஸ் ரே பிலிம் கட்டாயம் தேவைப்படும் நோயாளிகளுக்கும், நிர்ப்பந்தித்து வேண்டும் என கேட்கும் நோயாளிகளுக்கும் அரசு நிர்ணயித்த தொகையான ஒரு படத்துக்கு ரூ.50 பெற்றுக்கொண்டு வழங்கப்படுகிறது. இந்த நபர் A 4 தாளில் எக்ஸ் ரே பிரின்ட் எடுத்து மதியம் 12.45 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் பணியில் இருந்த எலும்பு முறிவு மருத்துவரிடம் சென்றுள்ளார்.

அவர் இவர் கையில் இருந்த தாளை வாங்கிப் பார்க்காமல் கணினியில் இவருடைய படத்தைப் பார்த்து எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றும், மூன்று நாட்களுக்கு மாத்திரைகளும் கைக்கு ஓய்வும் எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும் எனவும் கூறியிருக்கிறார். தன் கையில் உள்ள எக்ஸ் ரே தாளை வாங்கி சரியாக பார்க்காமல் மருத்துவர் அக்கறையில்லாமல் சிகிச்சை அளித்து விட்டார் என்ற தவறான புரிதலோடு புகார் அளித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.