விருதுநகர்: பட்டாசுத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் பட்டம்புதூர் பகுதியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ரூ.101 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விருதுநகரில் 95%க்கும் மேல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிகளவில் உயர்கல்வி சேர்க்கை நடைபெறுவது முக்கிய சாதனை. பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரையிலான அனைத்து கல்விச் செலவுகளையும் அரசே ஏற்றுக்கொள்ளும். விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ் இதற்கு தனி நிதியம் உருவாக்கப்படும். கல்விச் செலவை அரசே ஏற்று நடத்த முதற்கட்டமாக இத்திட்டத்துக்கு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
காரியாபட்டி மற்றும் திருச்சுழி வட்டங்களில் இருக்கும் கண்மாய்கள் மற்றும் அணைக்கட்டுகள் ரூ. 17 கோடி செலவில் மேம்படுத்தப்படும். காரியாப்பட்டி வட்டத்திலுள்ள தெற்காற்றின் குறுக்கே ரூ. 21 கோடி மதிப்பீட்டில் புதிய அணை ஒன்று கட்டப்படும். விருதுநகர் வட்டத்தின் கௌசிகா ஆறு, அருப்புக்கோட்டை வட்டத்தின் கஞ்சம்பட்டி கண்மாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகள் ரூ. 41 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.
வத்திராயிருப்பு மற்றும் இராஜபாளையம் பகுதிகளின் 22 கண்மாய்கள், ரூ. 18.10 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். காலிங்கபேரி, வெம்பக்கோட்டை, ஆனைக்குட்டம் மற்றும் கோல்வார்பட்டி அணைகள் ரூ. 23.30 கோடியில் மேம்படுத்தப்பட்டு, ரூ. 2.74 கோடியில் சுற்றுலாப் பயணிகளுக்காக பூங்காக்கள் அமைக்கப்படும்.
3 ஆண்டுகளில் 10 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனைகள் வழங்கப்பட்டுள்ளன. பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தியாவின் சக்தி வாய்ந்த நபர்களின் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டுள்ளார்கள். தமிழகத்தை உயர்த்த என் சக்தியை மீறி உழைப்பேன்.
நான் இன்னும் வேகமாக ஓட வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். பெருந்தலைவர் காமராஜரை நமக்கு வழங்கிய மண் விருதுநகர். பெருந்தலைவர் காமராஜரின் மறைவின் போது, அவரது மகன் மாதிரி அவருடைய இறுதி நிகழ்ச்சிகளை நடத்தியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. எனது திருமணத்திற்கு காமராஜர் வந்ததை மறக்கவே முடியாது.
விருதுநகர் மாவட்டத்தின் எதிர்கால தொழிற்துறை வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும். அருப்புக்கோட்டை அருகே சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் ரூ.350 கோடியில் புதிய சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆட்சியில் இருந்த போது மக்களைப் பற்றி சிந்திக்காதவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவுக்கு வருங்காலங்களிலும் தொடர் தோல்வியே கிடைக்கும். அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பதில் என்ன தவறு?. பொய் சொல்லலாம் பழனிசாமி அளவுக்கு பொய் சொல்லக்கூடாது என்று சொல்லும் அளவுக்கு எடப்பாடி பொய் சொல்கிறார். அரசின் எந்த திட்டத்தை மக்களுக்கு பயன் இல்லாத திட்டம் என அவர் சொல்கிறார்?.
அரசு திட்டங்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி புளுகுமூட்டைகளை அவிழ்த்து விடுகிறார். எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளை படித்தால், சிரிப்பு தான் வருகிறது. ஆணவத்துடன் பேசுவதாலேயே எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார்.
மக்களுக்காக 80 ஆண்டுகள் உழைத்தவரின் பெயரை வைக்காமல் யார் பெயரை வைப்பது? பதவி சுகத்துக்காக கரப்பான் பூச்சி மாதிரி சென்றீர்களே, உங்களின் பெயரை வைக்க முடியுமா?. கலைஞரின் புகழ்வெளிச்சம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது. அந்த வெளிச்சம் பழனிசாமியின் கண்களை கூச வைக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.