மதுரை: பிரபல எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா செளந்தராஜன் மதுரையில் காலமானார். அவருக்கு வயது 65. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை டிவிஎஸ் நகர், சத்யசாய் நகர் 4-வது குறுக்குத்தெரு பகுதியில் வசித்தவர் பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தராஜன். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்திரா செளந்தர்ராஜனின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கென வைக்கப்பட்டது. தமிழறிஞர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த இந்திரா செளந்தர்ராஜன் சிறுகதை, நாவல்கள், தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைக்கதைகள் எழுதிய இவர், புராணங்கள், இதிகாசங்களை கலந்து கதை எழுதுவதில் வல்லவராக திகழ்ந்தார். இவரது கதைகள் பெரும்பாலும், தெய்வீக தலையீடு, மறுபிறவி, அமானுஷ்யம் போன்ற விஷயங்களை உள்ளடக்கி இருக்கும். 700 சிறுகதைகள், 340 நாவல்கள், 105 தொடர்களை இவர் எழுதியுள்ளார்.
இவரது படைப்புகள் தொலைக்காட்சி தொடராகவும், திரைப்படங்களாகவும் வெளி வந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. சிருங்காரம், ஆனந்தபுரத்து வீடு, இருட்டு ஆகிய திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். மர்ம தேசம், சொர்ண ரேகை, விடாது கருப்பு போன்ற புகழ் பெற்ற தொடர்களின் கதைகள் இவர் எழுதியதே. இந்திரா செளந்தர்ராஜனின் மறைவு குடும்பத்தினர்கள் மட்டுமின்றி எழுத்தாளர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியது.
முதல்வர் ஸ்டாலின் இரங்கல்: இந்திரா செளந்தர்ராஜனின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உயிரிழந்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். மர்மமும் அமானுஷ்யமும் நிறைந்த புனைவுகளை எழுதுவதில் தேர்ந்தவரான இந்திரா சௌந்தர்ராஜன் நூற்றுக்கணக்கான நூல்களைப் படைத்தவர்.
வரலாற்றுக் காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்துச் சுவாரசியமான முறையில் புதினங்களைப் புனைவதில் வல்லவர். வெற்றிகரமான பல தொலைக்காட்சித் தொடர்களிலும் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் பங்காற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.