மும்பை: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கை மும்பையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் பெண்களுக்கு மாதம் ரூ.3,000, வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
இம்மாதம் 20-ம் தேதி மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் சிவசேனா (ஏக்நாத் அணி) பாஜக, தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணிக்கும் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
இந்தச் சூழலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பில் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் கூட்டாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதன் முக்கிய அம்சங்கள்:
- மகா லட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.
- பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும்.
- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். 50 சதவீத இடஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ரூ.25 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வசதி வழங்கப்படும்.
- இலவசமாக மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும்.
- விவசாய கடன்களை முறையாக செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.
- வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி வழங்கப்படும்.