சென்னை: மீட்டர் தட்டுப்பாட்டை நீக்க புதிதாக 12 லட்சம் மீட்டர்களை வாங்க மின்வாரியம் பணி ஆணை வழங்கி உள்ளது.
தமிழகத்தில் விவசாயம், குடிசைவீடு தவிர மற்ற அனைத்துப் பிரிவுகளிலும் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்க மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. வீடுகளுக்கு ஒருமுனை, மும்முனை போன்ற பிரிவுகளில் மின் இணைப்பு வழங்குவதற்கு ஏற்ப தனித்தனி மீட்டர்கள் பொருத்தப்படுகின்றன. தற்போது புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்துள்ள பலருக்கு மீட்டர் வழங்காமல் தாமதம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 2 மாதங்களுக்கு மேலாகியும் மீட்டர் இல்லாததால் மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரியம் அனுமதி அளித்துள்ள நிறுவனங்களிடம் நேரடியாக மீட்டர் வாங்கி கொடுத்தாலும் ஆய்வு செய்து பொருத்துவதாகக் கூறி,மின் இணைப்பு வழங்க, வேண்டுமென்றே தாமதம் செய்வதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், புதிதாக 12 லட்சம் மீட்டர்களை வாங்க மின்வாரியம் பணி ஆணை வழங்கி உள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்வாரியத்தின் 44 மின் பகிர்மான வட்டங்களில் உள்ள ஸ்டோர்களில் மீட்டர்கள் இருப்பு வைக்கப்படுகின்றன. அங்கிருந்து ஒதுக்கீடு கோரும் அலுவலகங்களுக்கு மீட்டர் அனுப்பப்படும். ஒருமுனை மீட்டருக்கு தட்டுப்பாடு உள்ளது. அதே சமயம், மும்முனை மீட்டர்கள் கையிருப்பில் உள்ளன.
மேலும், ஒருமுனை பிரிவில் 12 லட்சம் மீட்டர்களை வாங்க 6 நிறுவனங்களுக்கு பணி ஆணைவழங்கப்பட்டுள்ளது. இதில், இதுவரை 40,000 மீட்டர்கள் உள்ளன. கிடங்குகளில் ஏற்கெனவே மும்முனை பிரிவில் 60,000 மீட்டர்கள் கையிருப்பில் உள்ளன என்றனர்.