விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலைக்கு நேற்று ஆய்வு சென்ற முதல்வரிடம், விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என்ற பட்டாசு தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைக்கு, இன்று நடந்த விழாவில் அதற்கென தனி நிதியம் ஏற்படுத்தி, முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது பட்டாசு தொழிலாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் பகுதியில் மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெற்று 1,080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது. இங்கு நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதத்திற்கும் மேலான பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் பட்டாசு தொழில் மூலம் நேரடியாக 5 லட்சம் பேரும், மறைமுகமாக 3 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். விருதுநகர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 90 சதவீதத்திற்கும் மேல் தொழிலாளர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலானோர் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்களாக உள்ளனர்.
இந்நிலையில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கன்னிசேரிபுதூரில் உள்ள பட்டாசு ஆலையில் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்து, தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். முதல்வர் கலந்துரையாடிய பட்டாசு தொழிலாளி இசக்கியம்மாள் பேட்டியுடன் இந்து தமிழ் திசை நாளிதழில் நேற்று செய்தி வெளியாகி இருந்தது. அதில் அவர், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என விடுத்த கோரிக்கைக்கு முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பேட்டி வெளியாகி இருந்தது.
இன்று காலை நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்: நேற்று பட்டாசு ஆலைக்கு ஆய்வுக்கு சென்ற போது, தொழிலாளர்கள் முன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அறிவிப்பு வெளியிட விரும்புகிறேன். பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுடைய உயர்கல்வி வரையிலான அனைத்து கல்வி செலவுகளையும் அரசே ஏற்கும். இந்த உதவிகளை மாவட்ட அளவிலேயே முடிவு செய்து வழங்கும் வகையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் கீழ் தனி நிதியம் ஏற்படுத்தி, அதற்கு முதற்கட்ட உதவியாக ரூ.5 கோடியை அரசு வழங்கும், என அறிவித்தார்.
கோரிக்கை வைத்த மறுநாளே திட்டத்தை உருவாக்கி, நிதியும் அறிவித்ததால் பட்டாசு தொழிலாளர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து முதல்வருக்கு கோரிக்கை வைத்த பட்டாசு தொழிலாளி இசக்கியம்மாள் கூறுகையில்: பட்டாசு தொழிலாளர்களை ஆலைக்கு வந்த நேரில் சந்தித்து கோரிக்கையை கேட்டு, அதையும் அடுத்த நாளே வெளியிட்ட முதல்வருக்கு மிக்க நன்றி. பட்டாசு விபத்தில் பெற்றோரை இழந்த தொழிலாளர்கள் படிப்பை கைவிட்டு விட்டு பட்டாசு ஆலைகளுக்கே வேலைக்கும் செல்ல வேண்டிய நிர்பந்தம் இருந்தது.
முதல்வரின் அறிவிப்பால் எங்கள் குழந்கைளின் கல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கையை செய்தியாக வெளியிட்ட, அனைவருக்கும் தெரியப்படுத்திய இந்து தமிழ் திசை நாளிதழுக்கு நன்றி, என்றார்.
ஆலை உரிமையாளர் நாகராஜ்: முதல்வர் நேரடியாக பட்டாசு ஆலைக்கு வந்து ஆய்வு செய்து குறைகளை கேட்டதே அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்நிலையில் 24 மணி நேரத்திற்குள் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு திட்டத்ததை அறிவித்து நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு மிக்க நன்றி. முதல்வரின் இந்த அறிவிப்பு சிரமத்தில் உள்ள பட்டாசு தொழிலுக்கு நல்ல மாற்றத்திற்கான தொடக்கமாக உள்ளது. இதேபோல் பட்டாசு தொழிலுக்கான பிரச்சினை மற்றும் சிக்கல்களை தீர்க்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.