“மோடியை தொடக்கப் பள்ளிக்குதான் அனுப்ப வேண்டும்” – ‘சிவப்பு புத்தகம்’ குறித்து கார்கே கருத்து

மும்பை: இந்திய அரசியலமைப்பின் சிவப்பு புத்தகத்தை நகர்புற நக்சலிசத்துடன் இணைத்து பேசியதற்காக பிரதமர் மோடி மற்றும் பாஜகவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடினார்.

மகாராஷ்டிர மாநில தேர்தலுக்காக மகா விகாஸ் அகாதியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வெளியிட்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “காங்கிரஸ் கட்சியின் சாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கை மக்களைப் பிரிப்பதற்கானது இல்லை. இதன் மூலம் மக்கள் அதிக நன்மைகளைப் பெற முடியும்.

மோடி இந்தச் சிவப்பு புத்தகத்தை நகர்புற நக்சல் புத்தகம், மார்க்சிஸ்ட் இலக்கியத்தின் ஒரு பகுதி என்று குறிப்பிடுகிறார். கடந்த 2017-ம் ஆண்டு இதே போன்ற புத்தகம் ஒன்றை அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்க்கு அவர் வழங்கினார். அதில் வெற்றுப் பக்கங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

அந்தச் சிவப்பு புத்தகம் குறிப்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. அது ஒட்டுமொத்த அரசியலமைப்பு இல்லை. பாஜகவும், பிரதமரும் சித்தரிப்பது போல இது வெற்றுக் காகிதம் இல்லை. அவரை (பிரதமர் மோடி) மீண்டும் ஒரு தொடக்கப் பள்ளியில் சேர்க்க வேண்டியது அவசியம்.

நாட்டைப் பிரித்து வைத்தால்தான் காங்கிரஸ் பலமடையும் என்று பிரதமர் கூறுகிறார். இதற்கு என்ன அர்த்தம்? இந்தியாவின் ஒற்றுமைக்காக இந்திரா காந்தியும், ராஜீவ் காந்தியும் தங்களின் உயிரை தியாகம் செய்துள்ளனர். இதுபோன்ற முழக்கங்கள் யோகி இடமிருந்து வருகின்றது.

பிரதமர் மோடியோ நீங்கள் தனித்திருந்தால் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று கூறுகிறார். இதில் எந்த கோஷம் வேலை செய்யும் என்று தெரியவில்லை. ஆனால், நமக்கு சுதந்திரத்தை வாங்கித் தந்தவரைக் கொன்ற கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள்” என்று தெரிவித்தார். இந்தப் பேட்டியின் போது அரசியலமைப்பு சாசனத்தின் சிவப்பு நிற புத்தகம் ஒன்றை காட்டினார்.

தொடர்ந்து மகாராஷ்டிரா தேர்தலுக்கான வாக்குறுதிகளை பட்டியலிட்ட கார்கே, மகா விகாஸ் அகாதி வெற்றி பெற்றால் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று உறுதியளித்தார். மேலும் அவர் கூறுகையில், “நாங்கள் வெற்றி பெற்றால் மகாராஷ்டிராவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி தமிழகக்தில் இருப்பது போல, அதிகபட்ட இடஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்தை விட அதிகப்படுத்துவோம்.

இந்த சாதிவாரி கணக்கெடுப்பு என்பது மக்களை பிரிப்பதற்கானது இல்லை. மாறாக பல்வேறு சமூகங்களின் தற்போதைய நிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கான பலன்களை அதிகரிப்பதே இதன் நோக்கம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.