விஜயவாடா: நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவில் சாமானியர்களும் பயணிக்கும் கடல் வழி விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று விஜயவாடாவில் நடந்தது. இதில் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இருவரும் வெள்ளோட்டத்தில் பங்கேற்று கடல் விமானத்தில் ஸ்ரீசைலம் வரை பயணம் செய்தனர்.
முன்னதாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு கூறும்போது, ‘‘ஒவ்வொரு சாமானியரும் பயணிக்கும் வகையில் கடல் விமான சேவை திட்டம் அமல்படுத்தப்படும். இந்த விமானத்தில் 14 பேர் பயணம் செய்யலாம். ஆந்திராவில் 4 தடங்களில் திட்டம் அமல்படுத்தப்படும். அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் இச்சேவை ஆந்திராவில் தொடங்கும். இதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என்று கூறினார்.
ஸ்ரீசைலம் வரை சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அங்கு மல்லிகார்ஜுனர் கோயிலுக்கு சென்று சிவ பெருமானை வழிபட்டார். அதன்பின்னர் ஸ்ரீசைலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோயில்களை சுற்றுலா தலமாக்கும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த உள்ளோம். சுற்றுலா துறை மட்டுமே வருங்காலத்தில் நிலைத்து நிற்கும். நல்லமலை வனப்பகுதியையும் சுற்றுலாதலமாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. வளர்ச்சியும், மக்கள் நலனும் இந்த அரசுக்கு இரு கண்கள் போன்றவை. ஜெகன் ஆட்சியில் கஜானா காலியானதுதான் மிச்சம். மத்திய அரசுடன் நாம் இணைந்திருக்காவிட்டால், மூச்சுவிட கூட முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும். நதிகள் இணைப்பு திட்டம் மிகவும் அவசியம்.
கோதாவரி, பென்னா மற்றும் வம்சதாரா நதிகளை முதலில் இணைத்துவிட்டால், ராயலசீமாவில் வறட்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. போலவரம் அணைகட்டும் பணி நிறைவடைந்தால் ஆந்திராவில் வறட்சி நீங்கும். விரைவில் உங்கள் அனைவருக்கும் ஒரு நற்செய்தியை தெரிவிப்பேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.