இந்த எபிசோடை சலிப்பு ஏற்படாத வகையில் விஜய்சேதுபதி கையாண்டது பாராட்டத்தக்கது. ‘ஆமாம்தானே?’ என்று சொல்கிற பழக்கம், ‘அப்படித்தானே?’ என்பதாக மாறியிருக்கிறது.
என்னவொன்று, போட்டியாளர்களிடமிருந்து நேரடியாகவும் சுருக்கமாகவும் பதில் வரவில்லையென்றால் விசே டென்ஷன் ஆகி விடுகிறார். ‘கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க நொண்ணைகளா?’ என்பது போல் எரிச்சலைக் காட்டிவிடுகிறார். மெஷின் கட்டிங் தயாரிப்புபோல எல்லோரும் ஒரே பாணியில் பதில் சொல்ல முடியாது. குறுக்கு விசாரணை செய்யும் வழக்கறிஞர் போல போட்டியாளர்களுக்கு நெருக்கடி தரக்கூடாது. அதே சமயத்தில் போட்டியாளர்கள் சொதப்புவதையும் சொல்லியாக வேண்டும். கள்ள மௌனம், பாசாங்கு, அச்சம், தயக்கம் போன்றவற்றால் சரியாக பதில் அளிப்பதில்லை.அடுத்த வார நாமினேஷனில் தன்னைக் குத்தி விடுவார்கள் என்கிற பயமாக இருக்கலாம். இந்த மௌனம் விஜய்சேதுபதியை எரிச்சல்படுத்துகிறது. “நான் அவங்களை நோண்டறதா சொல்றாங்க.. என்னைத்தான் அவங்க நோண்டறாங்க.. பார்த்தீங்கள்ல.. மக்களே.. நான் பாவம்ல” என்று பார்வையாளர்களிடம் நொந்து போய் புலம்ப வேண்டிய நிலைமை.
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 34
வெள்ளை நிற கோட் சூட்டில் பாந்தமாக, அம்சமாக நுழைந்தார் விசே. ‘வீட்டுக்குள்ள இருக்கறவங்களைப் பத்தி நமக்கு விதம் விதமான அபிப்பிராயம் ஏற்பட்டிருக்கும். ஆனால் ‘கடந்து வந்த பாதை’ல அவங்க சொன்ன கதையைக் கேட்ட பிறகு அது மாறியிருக்கும்.. அப்படித்தானே?’ என்றபடி செல்லங்களைப் பார்க்க வீட்டிற்குள் சென்றார்.
வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பற்றி மிக மிக விரிவாகப் பார்க்கலாம். ஆனால் அவற்றில் ஒன்றுமேயில்லை என்பதுதான் நிஜம். மொட்டைக் கடுதாசி டாஸ்க் தொடர்பாக ரஞ்சித்திடம் பேசிக் கொண்டிருந்த ஆனந்தி, “யாரும் நம்மைக் காயப்படுத்தணும்ன்ற நோக்கத்துல எழுதியிருக்க மாட்டாங்க” என்று மோட்டிவேஷனாக பேசிக் கொண்டிருந்தார். இத்தனை முதிர்ச்சியுள்ளவர் ஏன் அந்தச் சமயத்தில் உடைந்து அழுதார்?
பெண்கள் டீமில், ஆட்டத்தைப் பற்றி தொடர்ந்து யோசிக்கிற அரிதான நபர்களுள் ஒருவராக இருக்கிறார் ஜாக்குலின். “அவங்க கொடுக்கற டாஸ்க் எல்லாம் செஞ்சுடலாம். பாய்ஸ் தங்களைப் பாவமா காட்டிக்கறாங்க. அதனாலதான் அவங்களுக்கு மைலேஜ் கூடுது” என்று தர்ஷிகாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஜாக். “டாஸ்க் கொடுக்கறதுல ரொம்பத்தான் பண்றாங்க.. நாம என்ன அடிமையா?” என்று பொங்கினார் தர்ஷிகா.
வர்ஷினியை அமர வைத்து டியூஷன் எடுத்துக் கொண்டிருந்தார் ஜாக்குலின். “உனக்குப் பிடிக்குதோ, இல்லையோ.. பெண்கள் அணி கூடத்தான் நீ ஒத்துப் போகணும். அவங்கதான் உன்னைக் காப்பாத்தப் போறவங்க. அணியோட நம்பிக்கையைப் பெறுகிற மாதிரி நீ நடந்துக்கணும்” என்றெல்லாம் விடிய விடிய ராமாயணம் சொன்னாலும் ‘மாஸ்டர் ஊத்தப்பம்’ காமெடி போல, “நான் பாய்ஸ் டீம்ல போய் கத்துக்கிட்டு வந்து ஆடறேன்” என்று வர்ஷினி பதில் சொன்னது எந்த மாதிரியான லாஜிக் என்று தெரியவில்லை.
விசே என்ட்ரி. அதற்கு முன் பார்வையாளருடன் உரையாடல் ‘முத்துவிற்கு worst performer கொடுத்தது சரியில்லை’ என்று ஒருவர் கடுமையான ஆட்சேபத்தை வைக்க “ஓகே.. விசாரிக்கறேன்.. ‘இது என்ன கதையா இருக்கே?’ன்ற மாதிரி code word வெச்சுக்கலாம்.. ஞாபகப்படுத்துங்க. ஓகேவா?” என்றபடி உள்ளே சென்றார். “என்னப்பா ராமசாமி.. சௌக்கியமா?” என்று சகஜமாக விசாரிப்பது போல பொதுஜனத்திடம் தொடர்ந்து ‘டச்’சிலேயே இருக்கிறார் மக்கள் செல்வன்.
பெண்கள் எப்போதும் பேரழகுதான் – விசேவின் தரமான உருட்டு
முத்து எழுந்தவுடன் பார்வையாளர்களின் கைத்தட்டல் வந்தது. (மக்களின் இந்தக் கைத்தட்டல் இருக்கிறதே, இரு முனை கத்தி மாதிரி. எப்போது வெட்டும் என்று தெரியாது.) “இந்த டிரஸ் என் பிரண்டு செஞ்சு குடுத்தான். அப்புறம்தான் தெரியுது, குடுத்து செஞ்சிருக்கான்” என்று ரைமிங்கில் சுய பகடி செய்து கொண்டார் முத்து. சத்யாவின் ஆடை அலங்காரத்தை ஒருவிதமான நமட்டுச் சிரிப்போடு பாராட்டினார் விசே. “பெண்களை தனியாப் பாராட்டலைன்னு நெனக்காதீங்க. நீங்க எப்போதுமே பேரழகுதான்” என்று விசே சொன்னது ஒரு தரமான உருட்டு.
‘நான் என்னத்த பெரிசா கேக்கப் போறேன்.. அதேதான்’ என்கிற முகபாவத்துடன் இருந்த விசே ‘கடந்த வாரம் எப்படியிருந்தது?’ என்கிற டெம்ப்ளேட் கேள்வியுடன் விசாரணையை ஆரம்பிக்க முதலில் எழுந்த வர்ஷினி, கடைசிப் பெஞ்சு மாணவன் போல் தயங்கி விட்டு ‘கஷ்டமா இருந்தது… கத்துக்கறேன் தலைவரே’ என்று NGK சூர்யா பாணியில் கையைக் கட்டிக் கொண்டார்.
‘அதிகாரத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது’ என்று புரட்சி முழக்கம் செய்தார் மஞ்சரி. “புதுசா வந்தவங்க கிட்ட ஒண்ணுமில்ல” என்று கட்டையைப் போட்டார் தீபக். “இந்த வாரம் டாஸ்க்ல தோத்துட்டோம்” என்று வருத்தப்பட்டார் சுனிதா.
“சொந்தக்காரங்க வீட்டுக்கு போன மாதிரி இருந்தது. எதிர்த்த வீட்டையே ஏக்கமா பார்த்துட்டு இருந்தேன். லோன்லியா இருந்தது” என்று ஜாக்குலின் வருத்தப்பட “என்னம்மா சொல்றீங்க.. உங்களை ‘தலைவி’ன்னு கொண்டாடிய கூட்டம்மா அது” என்று விசே ஆச்சரியப்பட “அதனால்தான் வருத்தமே” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டார் ஜாக். எனில் பாய்ஸ் டீம் ஊமைக்குத்தாக நிறைய குத்தியிருக்கிறார்கள் போல. “குழந்தை மாதிரி முகத்தை வெச்சுக்கறதுல உங்களை மிஞ்ச முடியாது” என்று ஜாக்கை கிண்டலடித்தார் விசே.
`கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க’ – டென்ஷன் ஆன விசே
“ஓகே… வைல்ட் கார்ட் என்ட்ரிஸ்.. உங்க அனுபவத்தைச் சொல்லுங்க. வெளில இருந்து இவங்களைப் பார்த்துட்டு வந்திருப்பீங்க.. என்னென்ன அபிப்ராயம் மாறுச்சு” என்று விசே கேட்டவுடன் முதலில் எழுந்த ரியா “சத்யா ஒண்ணுமே பண்ணலை. அருண் மேல இருந்த ஒப்பினியன் மாறிடிச்சு. பிடிக்காத பிளேயரா இருந்த சவுந்தர்யாவை பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு” என்று ஆர்வத்துடன் நீண்ட விளக்கம் தர “கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.. புரியுதா. உக்காருங்க. திரும்ப வரேன். அதுக்குள்ள சரியா யோசிச்சு வையுங்க” என்று டென்ஷன் ஆனார் விசே. அடிபட்ட முகத்துடன் பரிதாபமாக அமர்ந்தார் ரியா. விட்டிருந்தால் காமிரா முன்பாகப் போய் புலம்பியிருப்பார். “என்னை பேச விடாம தடுக்க யாருக்குமே உரிமையில்ல. அது விஜய்சேதுபதியா இருந்தாலும் கூட”.
ரியா கண்டிக்கப்பட்டதும் மற்றவர்களுக்கு பீதி ஏற்பட்டது. எனவே கலவரமான முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். இப்படி கடுகடுவென்று பேசினால் எப்படி ஃப்ரீயாக பதிலளிக்க முடியும்?! அடுத்து எழுந்த மஞ்சரி சுதாரித்துக் கொண்டார். “அருண் ஜாலியான ஆசாமின்னு வெளில நெனச்சேன். ஆனா உள்ளே வந்து பார்க்கறப்பதான் தெரியுது. பிரச்னைகளின் விதையே அவர்தான்” என்று நேரடியாக குற்றம் சாட்டினார். “நெகட்டிவ்வா தெரிஞ்ச அன்ஷிதா உள்ளே பாசிட்டிவ்வா இருந்தாங்க. சுனிதாவோட பிரெண்டுன்னு அவரைப் பத்தி சொன்னாங்க. ஆனா அது தப்பு.. சுனிதா கூட சண்டையெல்லாம் போட்டாங்க” என்று மஞ்சரி சொல்லி முடிக்க ‘குட்.. இப்படித்தான் எதிர்பார்க்கறேன்..’ என்கிற பாராட்டு எக்ஸ்பிரஷன் தந்தார் விசே.
அடுத்து எழுந்த வர்ஷினி “சார்.. அவன் குள்ளமாவும் இருப்பான்.. ஒரு மாதிரி உயரமாவும் இருப்பான்’ என்று குட்டையைக் குழப்ப “ஏம்மா… என்னோட கேள்வி புரிஞ்சுதா.. இல்லையா.. மக்களே.. நல்லா பார்த்துக்கங்க.. நான்தான் பாவம்.. நீங்கதான் சாட்சி” என்று பார்வையாளர்களிடம் புலம்பி சபையை கலகலக்க வைத்தார்.
இப்படியாக அனைவரிடமும் விசாரித்து விட்டு மீண்டும் ரியாவிடம் வந்தார் விசே. இந்த முறை சுதாரித்துக் கொண்ட ரியா “சார். .. வள்ளுவர் என்ன சொல்லியிருக்கார்னா.. எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்..” என்று சரியாக தயார் செய்த பள்ளி மாணவன் மாதிரி ‘டாண்.. டாண்..’ என்று பதிலளிக்க “குட்.. இத.. இத ..இதைத்தாம்மா நான் எதிர்பார்த்தேன்” என்று விசே பாராட்டிய பிறகுதான் ரியாவிற்கு மூச்சே வந்தது.
‘எல்லோருமே வேஸ்ட்’ – வைல்ட் கார்ட் என்ட்ரி பற்றிய ரிப்போர்ட்
பிரேக் முடிந்து திரும்பிய விசே, “ஓகே.. வைல்ட் கார்ட் என்ட்ரிஸ் உங்களைப் பத்தி சொன்னங்கள்ல.. நீங்க அவங்களைப் பத்தி சொல்லுங்க” என்றதும் பழைய போட்டியாளர்கள் அனைவரும் ரிவேன்ஜ் மோடில் ஆவேசமாகக் கைதூக்கினார்கள். “ரஞ்சித் சார் நீங்க சொல்லுங்க.. மங்கலகரமா இருக்கட்டும்” என்பது போல ஆரம்பித்து வைத்தார் விசே.
ரஞ்சித் பொதுவாக எவரையும் வெளிப்படையான நெகட்டிவ் தன்மையுடன் விமர்சனம் செய்தது கிடையாது. அவருடைய சுபாவம் அப்படி. ஆனால் அப்படிப்பட்டவரையே ரியா டென்ஷன் ஆக்கி விட்டார் போல. “அதுவரை அமைதியா இருந்த வீடு.. பதினெட்டு கோடுகளா பிரிஞ்சிடுச்சு. அவங்க வந்திருக்கவே தேவையில்ல” என்று ரஞ்சித் சொல்ல ரியாவின் முகம் கோணியது.
அடுத்து எழுந்த சுனிதாவும் சர்காஸ்டிக்காக ரியா மீது அர்ச்சனை பொழிந்தார். “அராகஜம்.. அராமஜம்.. பண்றாங்க” என்று ஸ்பெல்லிங் மிஸ்டேக் தமிழில் சொன்ன சுனிதாவிடம் “ஓ.. அராஜகமா?” என்று திருத்தினார் விசே. “மண்ணெண்ண.. வேப்பெண்ண.. வௌக்கெண்ண.. கேர்ள்ஸ் டீம் எக்கேடு கெட்டா.. எனக்கெண்ண?” என்கிற மோடில் வர்ஷினி இருப்பதாக சுனிதா சொல்ல பார்வையாளர்கள் உற்சாகமடைந்து கைத்தட்டினார்கள்.
“சாய்ஞ்சு கிடக்கும் இந்த ஷோவை செங்குத்தா நிறுத்தி வைக்கப்போறதா சொன்னாங்க சார்.. ஒண்ணும் நடக்கல. இந்த ராணவ் திருவிழால காணாம போன குழந்தை மாதிரி இருக்கார். வெளிப்படையா பேசப் போறதா சொன்ன வர்ஷினி இதுவரைக்கும் எதையும் உருப்படியா பண்ணலை. எல்லோருமே வேஸ்ட்” என்பது போல் ஜாக்குலின் பொளந்து கட்ட ‘பாரேன்..’ இந்தப் பொண்ண” என்கிற மாதிரி வியந்தார் விசே.
முத்துக்குமரன் எழுந்தவுடன் பலத்த கைத்தட்டல். “அவங்களுக்கு என்னென்னமோ கொடுத்து ஊட்டிப் பார்த்தோம். ம்ஹூம்.. எழுந்துக்கவே இல்லை. மைக் பாட்டரி கூட மாறிடுச்சு.. அவங்க மாறலை” என்று முத்து சொல்ல ரசித்து சிரித்தார் விசே. ‘இந்த ரயான் இருக்கறாரே.. அணியோட.. நல்லாப் பேசி ஜெல் ஆகிட்டார்” என்ற முத்து
சற்று இடைவெளி விட்டு “ஆனா.. அது கேர்ள்ஸ் டீமோட… எங்க மூஞ்சைப் பார்க்க முடியாம திரும்பிக்கறார்” என்று முத்து சொன்னவுடன் ரயான் உட்பட அனைவரும் சிரித்தார்கள். பட்டிமன்ற நகைச்சுவைப் பாணி முத்துவிற்கு நன்றாக கை கொடுக்கிறது. (நல்லா.. வாழைப்பழம் மாதிரி பேசுவான்.. மேடம்!).
“ராணவ் வேஸ்ட்டு சார்.. .சும்மாவே இருக்கான்” என்று அதிரடியாக ஆரம்பித்தார் சவுந்தர்யா. இந்த மேடம் மீதும் ஆரம்பத்தில் இதே போன்ற புகார்கள் இருந்தன என்பதை சவுண்டு சற்று யோசித்திருக்கலாம். “ரியா.. பெரிசா டயலாக்லாம் விட்டாங்க.. ஆனா காமிரா கூடத்தான் அதிகம் பேசறாங்க. ரயான் ஏதோ கொஞ்சம் பரவால்ல” என்று சவுந்தர்யா ரிப்போர்ட் முடித்ததும் “ஆக.. ஏரியாவுல ரவுடியா ஃபார்ம் ஆகிட்டிங்கள்ல?” என்று சவுண்டை விசே நக்கல் அடித்தது சுவாரசியமான காட்சி.
புதிய போட்டியாளர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்த விசே
எல்லோருடைய கமென்ட்டுகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் சிவக்குமார், ரயான், மஞ்சரி ஆகிய மூவரின் மீது பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்திருக்கிறது. ரியா, ராணவ், வர்ஷினி ஆகியோர்களின் மீது நெகட்டிவ் ரிப்போர்ட். இதில் ராணவ்வும் வர்ஷினியும் சுமாரான போட்டியாளர்கள் என்பதில் மறுப்பில்லை. வேஸ்ட் என்று கூட சொல்லி விடலாம். ஆனால் மற்றவர்கள் ஜெர்க் ஆகிற அளவிற்கான பாதிப்பை மிகக்குறுகிய காலத்தில் ஏற்படுத்தியிருப்பதால் ரியாவை ‘வேஸ்ட்’ என்று சொல்லி விட முடியாது.
இப்படி எல்லோரும் சேர்ந்து அடிக்கும் போது, அடி வாங்கியவர்களுக்கு விளக்கம் சொல்ல வாய்ப்பு அளிப்பதுதானே தர்மம்? அந்த வாய்ப்பை விசே தந்தார். ஆனால் ராணவ்வும் வர்ஷினியும் இப்போதும் சொதப்பினார்கள். சரியான பதில்களை அளிக்கவில்லை. ஆனால் ரியாவோ “பாயின்ட் கொடுத்திருக்கேன். டாஸ்க் ஜெயிச்சிருக்கேன். கிச்சன் டீம்ல வேலை பண்ணேன். நான் சரியாத்தான் ஆடியிருக்கேன்” என்று தெளிவாக விளக்கம் தந்தது நன்று.
“உங்களை நீங்களே புரிஞ்சுக்கத்தான் இந்த டாஸ்க்.. புரிஞ்சிப்பீங்கன்னு நம்பறேன்.. இல்ல.. நான் பிடிவாதமா இருப்பேன்னு சொன்னா.. உங்க இஷ்டம்.. இது எச்சரிக்கை மணி.. பார்த்துக்கங்க” என்று சொன்னபடி பிரேக்கில் சென்றார் விசே.
விசேவின் தலை மறைந்ததும் மக்கள் ஆங்காங்கே நின்று பேசினார்கள். ரியாவிடம் தன் விளக்கத்தை சவுந்தர்யா சொல்ல “இதை நீங்க சபைல சொல்லியிருக்கணும். தனியா சொல்றது ஹானஸ்ட் இல்ல” என்று எரிச்சல்பட்டார். பிறகு வழக்கம் போல் தனியாகச் சென்று “நீங்கள்லாம் மிக்சர் சாப்பிட்டுட்டு இருந்தீங்கன்னுதான் என்னை உள்ளே அனுப்பிச்சாங்க..” என்று புலம்பிக் கொண்டிருந்தார் ரியா. (அனத்துவது என் உரிமை. எவருக்காகவும் அதை விட்டுக் கொடுக்க மாட்டேன்!).
‘மாட்டிக்கினார் ஒருத்தரு.. காப்பாத்தணும் கர்த்தரு’ மோடில் சத்யா
பிரேக் முடிந்து திரும்பிய விசே “ஜாக்.. சூப்பரா சொன்னீங்க. ஏற்கெனவே நாங்க இத்தனை பேரு இருக்கோம்.. இதுல புதுசா.. வேற ஆளுங்களை உள்ளே அனுப்பி.. என்னத்த கிழிச்சிட்டீங்கன்ற மாதிரி.. சொன்னீங்கள்ல.. சிறப்பா இருந்தது” என்று சொல்ல “அய்யோ.. சார்.. நான் அப்படிச் சொல்லல..” என்று ஜெர்க் ஆனார் ஜாக். “ஏம்மா.. நான் உங்களைப் பாராட்டறேன்.. புரியுதா.. இல்லையா.. எல்லாத்தையும் சந்தேகப்படாதீங்க” என்று விசே சொல்ல “முதன்முறையா பாராட்டறீங்களா.. அதான்” என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டார் ‘எக்ஸ்பிரஷன் க்வீன்’ ஜாக்.
“இந்தக் கேள்வி பெண்கள் அணிக்கு. இப்பத்தான் லிவ்விங் ஏரியா.. உங்க உரிமைன்ற ஞானோதயம் வந்ததா?” என்று விசே கேட்க, நடிகர் மாதவன் போன்ற புன்னகையுடன் எழுந்த தர்ஷிகா “ஆக்சுவலி.. அது என்னோட ஐடியா. அந்த அளவிற்கு பாய்ஸ் டாஸ்க் தந்து எங்களை டார்ச்சர் பண்ணாங்க. நாங்க ரொம்ப ஈஸி டாஸ்க்தான் பதிலுக்கு கொடுத்தோம். ஆனா அவங்க அதை ஸ்போர்டிவ்வா எடுத்துக்கலை. ரெண்டு நாள் பேசியே இழுத்துட்டாங்க. என்னமோ. சொல்வாங்களே.. அகம் பிடிச்ச கழுத. ஹாங்… ஈகோ” என்பது போல் பதில் சொன்னார் தர்ஷிகா. விசே கேட்ட கேள்வியில் இருந்து எஸ்கேப் ஆகி பாய்ஸ் டீம் பக்கமாக அதைக் கோத்துவிட்டது தர்ஷிகாவின் சாமர்த்தியம்.
“கேப்டன் நெனச்சிருந்தா அஞ்சே நிமிஷத்துல இந்தப் பிரச்சினையை தீர்த்திருக்கலாம்” என்றார் சமீபத்தில் ரவுடியாகியிருக்கும் சவுந்தர்யா. ‘ஒகே.. இந்த வார கேப்டன்சி எப்படியிருந்தது?’ என்று அடுத்த டாப்பிக்கை விசே ஆரம்பிக்க “என்னடா. இது.. நம்ம பக்கம் வண்டியைத் திருப்பறாங்க?” என்று பீதியானார் சத்யா.
ஏறத்தாழ அனைத்துப் பெண்களும் எழுந்து சத்யாவைப் போட்டுத் தாக்க “ஏம்மா.. ரெண்டு பக்கமும் வந்து வந்து பஞ்சாயத்து பேசிட்டுப் போனேனே.. என்னைப் பார்த்தா பாவமா இல்லையா?” என்பது போல் நொந்து போன முகத்திற்கு மாறினார் சத்யா. ‘பெயருக்குத்தான் சத்யா கேப்டனாக இருந்தார். அவரைப் பின்னணியில் இருந்து இயக்கியவர்கள் முத்து மற்றும் அருண்’ என்பது பெண்களின் கருத்தாக இருந்தது.
ஆனால்…. பெண்கள் அணியில் இருந்து ஒரே ஒரு கலகக்குரல் விதிவிலக்காக கேட்டது. யெஸ்.. அது ‘என் வழி தனி வழி’ என்று பயணிக்கும் வர்ஷினி. “சத்யா கரெக்டாதான் இருந்தார்’ என்று பாய்ஸ் டீமிற்கு ஆதரவு தர “என்னம்மா சொல்றீங்க. ஊரே அவரைக் கழுவி ஊத்துது..” என்று விசே மடக்கியவுடன் “அதாவதுங்கய்யா.. ஆடு களவு போன மாதிரி கனவுதான் கண்டேன்” என்று பின்வாங்கினார் வர்ஷினி.
‘சாதாரண டாஸ்க்குக்கு இத்தனை அலப்பறை தேவையா?’
இதற்கு சத்யா விளக்கம் அளிக்க வேண்டும் அல்லவா? ஆனால் பிக் பாஸ் பாணியில் விசே அதற்கு சான்ஸ் தராமல் முத்து மற்றும் அருணை முதலில் விசாரிக்க “எங்களுக்கு ஈகோல்லாம் இல்ல.. 5 செகண்ட்டுன்னு சொல்லி பயமுறுத்தினாங்க.. ஆட்டத்தை சுவாரசியப்படுத்தலாம்ன்னு அப்பவே சொல்லியிருந்தா ஒத்துக்கிட்டு இருந்திருப்போம்’ என்று கால் பிளேட் பிரியாணிக்குள் ஒரு முழு ஆட்டையே ஒளித்து வைக்க முயன்றார் முத்து.
“நான் ஓவரா திங்க் பண்ணுவேன். பஞ்சாயத்துக்கு டைம் தேவைப்பட்டுது” என்று அதே பல்லவியை இப்போதும் சத்யா பாட “நீங்க ரெண்டாவது முறையா கேப்டனா இருக்கீங்க.. இன்னமுமா டைம்” என்று எரிச்சலானார் விசே.
“இது ஒரு சாதாரண டாஸ்க். இதை ஜாலியா பண்ணி.. கேமை சுவாரசியமா மாத்தியிருக்கலாம்… ஆனா.. டிராப்ன்றீங்க.. பயமா இருக்குன்றீங்க.. அடப் போங்கப்பா” என்று பாய்ஸ் டீமை விசே இறங்கி அடிக்க அனைவரும் உற்சாகம் இழந்து தலையைக் குனிந்தார்கள்.
பிரேக் முடிந்து திரும்பிய விசே, காமிரா முன்னால் சவால் விட்டுப் பேசிய ரியாவையும் வர்ஷினியையும் விசாரித்தார். ‘பிக் பாஸ் ஷோவே தப்புன்னு எப்படிம்மா சொல்வீங்க?” என்று ரியாவையும் “உண்மை ஒரு நாள் ஜெயிக்கும்ன்னு என்னனென்னவோ பன்ச் டயலாக் பேசினீங்க.. அப்படி என்னதான் அந்த உண்மை.. இப்பச் சாெல்லுங்களேன். கேட்போம்” என்று வர்ஷினியையும் போட்டு அவர் காய்ச்சி எடுக்க இருவரிடம் இருந்து சரியான பதில்கள் வரவில்லை. ரியாவாவது பரவாயில்லை. வர்ஷினி பேந்தப் பேந்த முழித்து சவுந்தர்யவாவிற்கே நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தார்.
“நாளைக்கும் விசாரிக்க வேண்டியது இருக்கு. வந்து வெச்சுக்கறேன் கச்சேரியை” என்றபடி விசே கிளம்பினாலும் ‘என்னத்த பேசி.. என்னத்த விசாரிச்சு..’ என்கிற சலிப்பு அவரது முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“என்னடா நம்ம நெலம இப்படி ஆயிடுச்சு..” என்று பாய்ஸ் டீம் நொந்து போனது. இப்போது ஆடுகிற நடனத்தை அப்போதே செய்து சுவாரசியப்படுத்தியிருந்தால் இந்த அவப்பெயர் வந்திருக்காது. ஆகவே இந்த AVP டாஸ்க் விவகாரத்தில் பெண்கள் அணிக்குத்தான் மைலேஜ் கிடைத்திருக்கிறது.
இந்த வாரம் வெளியேற்றப்படப் போகிறவர் யார் என்கிற தகவல் வழக்கம் போல் கசிந்திருக்கிறது. அநாவசியம்தான். என்றாலும் ஒரு க்ளூவின் மூலம் சொல்லி விடுகிறேன். “நீ வெளிய பண்ணதெல்லாம் நல்ல டான்ஸூ. ஆனா பிக் பாஸ் வீட்டுக்குள்ள பண்ணதெல்லாம் வெறும் உடான்ஸூ”… கவித.. கவித…