BGT தொடரில் ஆஸ்திரேலியா செய்த அதிரடி மாற்றம்! இந்தியாவை வீழ்த்த புதிய யுக்தி!

இந்தியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் வரும் நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஆஸ்திரேலியா தங்களது அணியை அறிவித்துள்ளது. 13 பேர் கொண்ட இந்த அணியில் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜோஷ் இங்கிலிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாக ஆஸ்திரேலியா அணிக்கு டேவிட் வார்னர் தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வந்தார்.

அவர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் உஸ்மான் கவாஜாவுடன் இணைந்து பேட்டிங் செய்ய கூடிய வீரரை ஆஸ்திரேலியா தேடி வந்தது. சமீப தொடரில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க ஆட்டக்காராக விளையாடினார். இருப்பினும் அவரது செயல்பாடுகள் அணிக்கு திருப்தி அளிக்காததால் மார்னஸ் லாபுசாக்னேவை  தொடர்ந்து நான்காவது இடத்தில் களமிறங்க உள்ளார். இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரராக இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 25 வயதான நாதன் தெற்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக உள்ளார். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் மெக்ஸ்வீனி இன்னும் சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆகவில்லை. 

இந்தியா ஏ அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தார் நாதன் மெக்ஸ்வீனி. ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பான்கிராஃப்ட் மற்றும் சாம் கான்ஸ்டாஸ் ஆகியோருக்கு இடையே போட்டி இருந்தபோதிலும், மெக்ஸ்வீனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் அணி நிர்வாகம் அவர் மீது கூடுதல் நம்பிக்கை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. “உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் நாதன், சர்வதேச தொடரிலும் அதையே தொடர்வார் என்று எதிர்பார்க்கிறோம். தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கான அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதனால் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என்று ஆஸ்திரேலியாவின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி கூறினார். 

மேலும் ஜோஷ் இங்கிலிஸ் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜோஷ் இங்கிலிஸ் சமீபத்தில் பெர்த்தில் நடைபெற்ற போட்டியில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளராக இடம் பெற்றுள்ளனர். மறுபுறம் நாதன் லயன் அவரது 130வது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். ரிசர்வ் வேகப்பந்து வீச்சாளராக ஸ்காட் போலண்ட் இடம் பெற்றுள்ளார். டிராவிஸ் ஹெட் 5வது இடத்திலும், ஆல் ரவுண்டராக மிட்செல் மார்ஷ் செயல்பட உள்ளார். அறுவை சிகிச்சை காரணமாக கேமரூன் கிரீன் இந்த தொடரில் இடம் பெறவில்லை. முதல் போட்டி பெர்த்தில் நடைபெற உள்ள நிலையில், அடிலெய்ட், பிரிஸ்பேன், மெல்போர்ன், சிட்னி ஆகிய இடங்களில் மற்ற போட்டிகள் நடைபெறுகிறது.

TheTest squad has dropped, so drop us your Border-Gavaskar Trophy predictions #AUSvIND

Full story: https://t.co/J61jGIE6b7 pic.twitter.com/d37PPYhaos

— cricket.com.au (@cricketcomau) November 9, 2024

ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியான், மிட்செல் மார்ஷ், நாதன் மெக்ஸ்வீனி, ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.