பிரபல குணசித்திர நடிகர் டெல்லி கணேஷின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
அவரின் உடலுக்கு திரைத்துறையினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது நடிகர் மணிகண்டனும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவருடனான நினைவுகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். நடிகர் மணிகண்டன் டெல்லி கணேஷை வைத்து `நரை எழுதும் சுயசரிதம்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
உருக்கமாகப் பேசிய மணிகண்டன், “பத்து வருஷத்துக்கு முன்னாடி அவர் வீட்டு கேட்ல நின்னுட்டு இருந்தேன். அப்போ அவர், `யாரு..என்ன வேணும்?’னு கேட்டார். நான் கதை சொல்ல வந்திருக்கேன்னு சொன்னதும் வீட்டுக்குள்ள கூப்பிட்டு பேசினார். அவ்ளோ பெரிய சீனியர் நடிகர் அப்படி என்னை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. அவர் வாங்குற சம்பளத்துல பாதியை மட்டும் வாங்கி எனக்காக நடித்துக் கொடுத்தார். நான் ஒரு சீனியர் நடிகருக்கு கொடுக்க வேண்டிய எந்த ஏற்பாடுகளையும் அப்போது அவருக்கு பண்ணிக் கொடுக்கல. நான் செய்கிற சின்ன சின்ன தவறுகளையும் பொருத்துக்கிட்டு இருந்தார். நடிப்புக்கலையை அதிகமாக நேசிக்கக்கூடியவர். திரைப்படம் இயக்குறதைப் பற்றிய அந்த சமயத்துல பெரிய அளவுல எந்த அனுபவமும் இல்லாத என்னை நம்பி ரொம்ப சிறப்பாக நடிச்சுக் கொடுத்தார். அந்த விஷயங்களெல்லாம் அவர் நடிப்பு கலையின் மீது வச்சிருந்த நேர்மையைச் சொல்லும்.
இப்போகூட ரெண்டு மாசத்துக்கு முன்னாடி எனக்கு கால் பண்ணினார். அவர் `நான் வேற ஒரு மணிகண்டனுக்கு கால் பண்றதுக்கு உனக்கு பண்ணிட்டேனா…சரி கால் பண்ணிட்டேன் ஒரு பத்து நிமிஷம் பேசு’னு சொன்னார். நான் என்னுடைய படத்தை எடுக்கும்போது டெல்லி கணேஷ் சார் இறந்துட்டார்னு ஒரு வதந்தி பரவுச்சு. அப்போ நான் பயந்து உடனடியாக அவருக்கு கால் பண்ணினேன். அவர்,`நான் சாப்டுட்டு இருக்கேன். உன் படத்தை முடிச்சுக் கொடுக்காமல் நான் சாகமாட்டேன்’னு சொன்னார். நான் அவர்கூட இருந்த தருணங்கள் மூலமாக வாழ்க்கைல பல பாடங்களைக் கத்துகிட்டேன்.” என்றார் .