மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேத்தியும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோவின் மகளுமான வானதி ரேணுவுக்கும் சென்னையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணனுக்கும் கடந்த 7ம் தேதி சென்னை திருவேற்காட்டில் வைத்து திருமணம் நடந்தது.
முதல் நாள் அதாவது 6ம் தேதி நடந்த திருமண வரவேற்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பிரபுசங்கர் உள்ளிட்ட சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வைரமுத்து, சத்யராஜ் என பல விஐபி-க்கள் கலந்து கொண்டனர்.
திருமண நாளன்றும் வைகோ குடும்ப உறவினர்கள், மணமகன் வீட்டாரின் உறவினர்களுடன் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக இந்தத் திருமணத்துக்காக நெருங்கிய உறவினர்களுக்குத் தருவதற்காக அச்சடிக்கப் பட்டிருந்த அழைப்பிதழில் வைகோவின் குலம் கோத்ரம் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெற்றிருந்தது சர்ச்சையைக் கிளப்பி வைரலானது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் திருமணத்துக்கு வந்திருந்த அனைவருக்கும் தற்போது நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார் துரை வைகோ.
‘எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன்’ எனத் தொடங்கும் அந்தக் கடிதத்தில் திருமணத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்திருக்கும் துரை வைகோ, தன் மகள் மற்றும் மணமகன் வீட்டாரின் விருப்பத்துக்காகவே இந்து மத முறைப்படி திருமணம் நடைபெற்றதாகத் தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னுடைய விருப்பத்தின் பேரிலேயே தமிழ் மந்திரங்கள் வாசிக்கப் பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.