சென்னை: அதிமுக களஆய்வுக் குழுவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி சென்னையில் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதிமுக கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக களஆய்வு செய்ய `கள ஆய்வுக் குழு’ ஒன்றை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி கடந்த வாரம் நியமித்தார்.
கட்சியின் பல்வேறு நிலைகளில் உள்ள கட்டமைப்புகளின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாக கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை மாவட்ட வாரிய சென்று களஆய்வு செய்து, அதன் விபரங்களை அறிக்கையாக டிச.7-ம் தேதிக்குள் அளிக்கவும் `கள ஆய்வுக் குழு’வுக்கு பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவில் முன்னாள் அமைச்சர்களான கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அமைப்பு செயலாளர்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, அ.அருணாசலம், மகளிரணி செயலாளர் பா.வளர்மதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவுடன் பழனிசாமி இன்று, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். இதில் களஆய்வின்போது செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், நேற்று விருதுநகரில் முதல்வர் ஸ்டாலின் பழனிசாமியை விமர்சித்தது தொடர்பாகவும் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.