அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு அச்சத்தில் பல நாடுகள்… இதில் இந்தியா இல்லை – ஜெய்சங்கர் பேச்சு

புனே,

மராட்டியத்தின் மும்பை நகரில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின்பு, இந்தோ-அமெரிக்க உறவுகளில் எப்படிப்பட்ட தாக்கம் இருக்கும்? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதிலும், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்புடன் தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியின் பரஸ்பர நட்புணர்வை கருத்தில் கொள்ளும்போது, இரு நாடுகளின் உறவு எப்படி உள்ளது? என கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்து அவர் பேசும்போது, ஜனாதிபதி டிரம்புக்கு வந்த முதல் 3 தொலைபேசி அழைப்புகளை எடுத்து பேசியதில் பிரதமர் மோடியின் அழைப்பும் ஒன்று என நான் நினைக்கிறேன். பிரதமர் மோடி, உண்மையில் பல்வேறு ஜனாதிபதிகளுடன் பரஸ்பரம் நேசவுணர்வை கட்டியெழுப்பி இருக்கிறார்.

அவர் முதலில் அமெரிக்காவுக்கு சென்றபோது, ஜனாதிபதியாக இருந்தவர் ஒபாமா. அதன்பின்பு டிரம்ப், பின்னர் பைடன் ஜனாதிபதி பதவியில் இருந்தனர். பிரதமர் மோடி, முழு முயற்சி மேற்கொண்டு நட்புறவை எப்படி ஏற்படுத்துகிறார்? என்பதில் இயற்கையாகவே அவரிடம் சில விசயங்கள் காணப்படுகின்றன என்பது உங்களுக்கே தெரியும். அது பெரிய அளவில் உதவியுள்ளது என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும்போது, இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நிறைய உதவியுள்ளது என்று நான் நினைக்கிறேன். சமீபத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் பல நாடுகள் பயந்து போய் உள்ளன என நன்றாக அறிவேன். ஆனால், இந்தியாவுக்கு கவலை எதுவும் இல்லை என்றும் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.