சென்னை: இந்தியைப் பரப்புவதுபோல, தொன்மை மிக்க தமிழையும் பரப்புவோம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
தென்னிந்திய இந்தி பிரச்சார சபா சார்பில், பாரத்-இலக்கியம் மற்றும் ஊடக விழா குறித்த 3 நாள் கருத்தரங்கம் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
ரிஷிகளாலும், முனிவர்களாலும் உருவான நம் நாடு, சுதந்திரத்துக்கு முன்பு வரை பாரதம் என்றே அழைக்கப்பட்டது. மகாகவி பாரதியும் அதுபோலவே அழைத்தார். சுதந்திரத்துக்குப் பிறகு, அரசியல் காரணங்களுக்காக இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
கம்பராமாயணம் போன்ற புராண காவியங்கள் நாடு முழுவதும் போய் சேரவில்லை. சுதந்திரப் போராட்டம் தொடங்கியது தமிழ் மண்ணில்தான். ஆனால், விடுதலைக்காக பாடுபட்ட ஏராளமான தியாகிகள் பற்றிய தகவல்கள் வெளிக்கொணரப்படவில்லை. மருது சகோதரர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்றவர்களின் அளப்பறிய பங்களிப்பும், தியாகமும், வீரமும் பெரியளவில் நினைவுகூரவோ, பாராட்டப்படவோ இல்லை.
இந்தியை பரப்புவதுபோல, தொன்மையும், செழுமையும் மிக்க தமிழையும் பரப்புவோம். இலக்கியங்களை மக்களிடம் முழுமையாக கொண்டுசேர்ப்போம். ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது.
புதிய பாரதத்தை உருவாக்க இலக்கியம்தான் வலிமையான ஆயுதம். அதை உருவாக்கவும், 2047-ல் பாரதம் தன்னிறைவு பெற்ற, வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற தற்போதைய ஆட்சியாளர்கள் 24 மணி நேரமும் தீவிரமாகப் பாடுபடுகின்றனர். எனவே, ஊடகங்களை நேர்மறை சிந்தனைகளுடன், நாட்டின் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ஆளுநர் தொடக்கத்தில் தமிழிலும், தொடர்ந்து இந்தியிலும், அவ்வப்போது ஆங்கிலத்திலும், நிறைவில் தமிழிலும் பேசினார். நாடு முழுவதும் இருந்து வந்திருந்த இந்தி அறிஞர்கள், விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.